டி20 உலகக் கோப்பைக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவு பெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய புச்சி பாபு போட்டியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்துகிறது. ஆகஸ்ட் 18 அன்று தொடங்கும் இப்போட்டி செப்டம்பர் 9 வரை நடைபெறுகிறது. இப்போட்டி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க யூடியூப் சேனலில் நேரலை செய்யப்படுகிறது. இப்போட்டி குறித்த அறிவிப்பு மற்றும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் குறித்து அசோக் சிகாமணி விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அசோக் சிகாமணி கூறியதாவது:
"அகில இந்திய புச்சி பாபு போட்டி இந்தியாவிலேயே பெரிய போட்டிகளில் ஒன்று. இதற்குப் பெரிய வரலாறு இருக்கிறது. இந்தியாவுக்காக விளையாடிய அனைவரும் புச்சி பாபு போட்டியில் விளையாடியிருப்பார்கள். எனவே, இது மினி ரஞ்சி கோப்பைப் போட்டியைப் போன்றது.
ஒவ்வோர் ஆண்டும் பல அணிகள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால், 15 அல்லது 16 அணிகளைக் கொண்டு மட்டுமே போட்டியை நடத்த முடியும். இம்முறை கூடுதலாக 4 அணிகளைச் சேர்த்துள்ளோம். எனவே, 16 அணிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
கடந்தாண்டு கோவை, திண்டுக்கல் வரை எடுத்துச் சென்றோம். இம்முறை பல மைதானங்கள் தேவைப்படும் என்பதால், சென்னையிலேயே நடத்தப்போகிறோம்.
இந்தப் போட்டி புகழ்பெற்ற போட்டிகளில் ஒன்று என்பதால், நிறைய அணிகள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். வடக்குப் பகுதிகளில் மழை பெய்துகொண்டே இருக்கும் என்பதால், ரஞ்சி கோப்பைக்கு முன்பு பயிற்சிப் போட்டியாக இது இருக்கும். ரஞ்சி கோப்பையை போலவே விளையாடுவதால், இதில் பங்கேற்கும் அணிகளுக்கு இது ரஞ்சி கோப்பைக்கானப் பயிற்சியைப் போலவே இருக்கும்.
எங்களுக்கு நிதிச் சிக்கல், நேரச் சிக்கல் உள்ளன. பல அணிகள் பங்கேற்கும் பட்சத்தில், ரஞ்சி கோப்பையை போல மாறிவிட்டால், நாம் ஏதோ ரஞ்சி கோப்பைக்கு இணையாக ஒரு போட்டியை நடத்துவது போல மாறிவிடும். அதைச் செய்யக் கூடாது. எனவே, அணிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து முன்னணி அணிகளை மட்டும் போட்டியில் பங்கெடுக்க அனுமதிக்கிறோம்.
மும்பை அணி வருகிறது. பெரும்பாலும், ரஞ்சியில் விளையாடும் வீரர்கள் தான் இந்தப் போட்டியில் பங்கேற்பார்கள். நாமும் இப்படி தான் அணியைத் தேர்வு செய்து வைத்துள்ளோம். இரு அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம், நிறைவு வாய்ப்புகளை வழங்குகிறோம். ரஞ்சி கோப்பைக்கான அணித் தேர்வுக்கும் இது வழிவகுக்கிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்க வரும் யாரும் பரிசுத் தொகைக்காக வரவில்லை. இது புகழ்பெற்ற போட்டி. கிரிக்கெட்டுக்காக தான் பெரும்பாலும் வருகிறார்களே தவிர பரிசுத் தொகைக்காகவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ யாரும் வருவதில்லை.
அடுத்தாண்டு பிப்ரவரியில் டி20 உலகக் கோப்பை வருகிறது. அதற்கு முன்பு டிசம்பரிலேயே சேப்பாக்கம் மைதானம் தயாராகிவிடும். புற்களை அமைத்து 15, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்றார்கள். எனவே, புற்களைப் புதிதாகப் புனரமைக்கிறோம். விக்கெட் (ஆடுகளம்) அப்படியே தான் இருக்கிறது. மைதானத்தையும் வடிகால் முறையையும் புனரமைக்கிறோம். நிறைய புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளதால், வடிகால் முறையை மேம்படுத்த நினைக்கிறோம். புனரமைப்புப் பணிகள் டிசம்பரில் நிறைவு பெறும்" என்றார் அசோக் சிகாமணி.
Chepauk Stadium | TNCA | Ashok Sigamani | Tamil Nadu Cricket Association | All India Buchi Babu Tournament | T20 World Cup |MA Chidambaram Stadium |