மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் https://x.com/BezwadaWilson
தமிழ்நாடு

உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தூய்மைப் பணியாளர்கள் இரவில் கைது! | Sanitation Workers | Chennai

போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் நேற்று (ஆக. 13) தெரிவித்தது.

ராம் அப்பண்ணசாமி

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு கூடாரங்களை அமைத்துப் 13 நாள்களாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று (ஆக. 13) இரவு காவல்துறை கைது செய்தது.

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் கடந்த ஆக. 1 முதல் குப்பைகளை கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மண்டலங்களில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களின் மாத ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

எனவே தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு கூடாரங்களை அமைத்து கடந்த ஆகஸ்ட் 1 முதல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் தூய்மைப் பணியாளர்களுடன் தமிழக அரசு மேற்கொண்ட பல கட்டப் பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படவில்லை.

இதற்கிடையே, தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட பொது நல வழக்கு ஒன்றை நேற்று (ஆக.13) விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, `போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலை ஆகியவற்றை மறித்துப் போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என்று தெரிவித்தது.

வழக்கு விசாரணையின் முடிவில் ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி சென்னை மாநகர காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ரிப்பன் மாளிகையை சுற்று நேற்று மாலை காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் முதலில் அறிவுறுத்தினர். எனினும் கலைந்து செல்லாமல் தங்களது போராட்டத்தை தூய்மை பணியாளர்கள் தொடர்ந்தனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி நேற்று (ஆக. 13) இரவு தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து அரசுப் பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர்.