தமிழ்நாடு

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும்!

முன்னதாக, இன்று மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

யோகேஷ் குமார்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தென்கிழக்கே சுமார் 360 கி.மீ. தொலைவில் உள்ளது. மணிக்கு 12. கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து புதுச்சேரி - நெல்லூர் இடையே சென்னை அருகே நாளை அதிகாலை கரையைக் கடக்கிறது.

சென்னைக்கு அருகே கரையைக் கடப்பதால் சென்னையில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டது. குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் அதிகனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கேற்ப, இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் மழையின் தாக்கம் ஏற்படவில்லை.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.