25 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் டிச. 15-ல் நடைபெறவுள்ள சென்னை பிரஸ் கிளப்புக்கான தேர்தலை திட்டமிட்டபடி நடத்தத் தடையில்லை என அறிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
செய்தி ஊடகத்துறையில் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், தமிழகத்தின் முன்னோடி பத்திரிகையாளர்கள் சிலரால் கடந்த 1972-ல் ‘மெட்ராஸ் பிரஸ் கிளப்’ உருவானது. இதன்பிறகு 1997-ல் சென்னை பிரஸ் கிளப் என இந்த அமைப்பு முறையாக பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த அமைப்பின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க கடைசியாக கடந்த 1999-ல் தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 25 ஆண்டுகளாக எந்தத் தேர்தலும் நடைபெறவில்லை.
பிரஸ் கிளப்பின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த சிலர் தேர்தலை நடத்தவிடாமல், நீண்ட காலமாக கிளப்பை ஆக்கிரமித்திருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், பிரஸ் கிளப்பின் உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வரும் டிச. 15-ல் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலை நடத்த மூத்த பத்திரிக்கையாளர் என். ராம் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இந்த வழிகாட்டுதல் குழு அமைத்த துணைக் குழு தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை இறுதி செய்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலை நடத்த ஆட்சேபம் தெரிவித்து, பிரஸ் கிளப்பின் உறுப்பினர் டி.எம். விஸ்வநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
மனு மீதான விசாரணையை நடத்திய நீதிபதி ஜெயச்சந்திரன், தேர்தல் அறிவிப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து, சென்னை பிரஸ் கிளப் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருக்கும் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை நேரில் பார்வையிட்டார் தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி வி. பாரதிதாசன்.