மெட்ரோ ரயில் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

பூந்தமல்லி - போரூர் இடையில் மெட்ரோ ரயில்: பிப்ரவரி முதல் இயக்கப்பட்ட வாய்ப்பு | Metro Rail |

ஆனால் போரூர் மற்றும் வடபழனிக்கு இடைப்பட்ட நிலையங்களில் அவை நிற்காது....

கிழக்கு நியூஸ்

பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் வரும் பிப்ரவரி முதல் இயக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கி.மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி - போரூர் சந்திப்பு வரையிலான 10 கி.மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதற்கான பாதுகாப்பு சான்றிதழ் பெற, சோதனை ஓட்டப் பணிகள் கடந்த ஆகஸ்ட்டில் நடத்தப்பட்டன. அப்போது, இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து அக்டோபர் மாதமே இதற்கான இறுதி ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமானது. இந்நிலையில், தற்போது பூந்தமல்லி - போரூர் இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கான சிக்னல் கட்டமைப்புக்கு மத்திய ரயில்வே வாரியம் இறுதி ஒப்புதலை அளித்துள்ளது.

இதனால் பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் வரும் பிப்ரவரி இறுதிக்குள் இயக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்ததாவது:-

"பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை, ரயில்கள் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். பிப்ரவரி மாத இறுதிக்குள், பயணிகளுக்கு வடபழனி வரை போக்குவரத்து இணைப்பை வழங்கவுள்ளோம். இதன் மூலம் அவர்கள் முதல் மற்றும் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடங்களுக்கு இடையே மாறிப் பயணிக்க முடியும். எனவே, ரயில்கள் போரூரைக் கடந்து வடபழனி வரை செல்லும், ஆனால் போரூர் மற்றும் வடபழனிக்கு இடைப்பட்ட நிலையங்களில் அவை நிற்காது. போரூர் முதல் கோடம்பாக்கம் வரையிலான நிலையங்கள் ஜூன் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அப்போது அந்தப் பாதையில் சேவைகளைத் தொடங்க நாங்கள் தயாராக இருப்போம்” என்கிறார்கள்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தொடக்க விழாவில், இதனைப் பிரதமர் மோடியும், முதலமைச்சர் ஸ்டாலினும் இணைந்து தொடங்கி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CMRL is likely to provide connectivity from Poonamallee to Vadapalani on the Phase II network by the end of February.