தமிழ்நாடு

ஆண்டுக்கு ஆண்டு உயரும் சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை!

2024-ம் ஆண்டில் 10.52 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்துள்ளனர்.

ராம் அப்பண்ணசாமி

2015 முதல் 2024 வரை சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை குறித்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம். இதன் மூலம், 2020-ல் இருந்து சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து உயர்ந்துவருவது தெரியவந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இன்று காலை பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,

`2024-ம் ஆண்டில் 10.52 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்துள்ளனர். ​சென்னை மெட்ரோ இரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

சென்னை மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்ட 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 2024-ம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ இரயிலில் பயணித்துள்ளார்கள். 2023-ம் ஆண்டை விட 2024-ம் ஆண்டில் 1.41 கோடி பேர் அதிகமாகப் பயணித்துள்ளார்கள்.

2015 முதல் 2018 வரை 2.80 கோடி பயணிகளும், ​2019-ம் ஆண்டில் 3.28 கோடி பயணிகளும், 2020–ம் ஆண்டில் 1.18 கோடி பயணிகளும், 2021-ம் ஆண்டில் 2.53 கோடி பயணிகளும், 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பயணிகளும், 2023-ம் ஆண்டில் 9.11 கோடி பயணிகளும், கடந்த 2024-ம் ஆண்டில் 10.52 கோடி பயணிகளும் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளார்கள்.

29 ஜூன், 2015 (மெட்ரோ ரயில் ஓட்டத்தின் முதல் நாள்) தொடங்கி 31 டிசம்பர், 2024 வரை மொத்தம் 35.53 கோடி பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்’.