கரூர் துயரச் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்ப்பட்ட 3 பேரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரையின்போது கூட்டநெரிசல் ஏற்பட்டதில் பலருக்கு மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டது. இதில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். மேலும், சம்பவம் குறித்து தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மேலும், சமூக ஊடகங்களில் இச்சம்பவம் குறித்து வதந்திகளைப் பரப்பியதாக 25 பேர் மீது சென்னை மாநகரக் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அதன்பேரில் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சகாயம் ஜேம்ஸ், மாங்காடு மற்றும் ஆவடியைச் சேர்ந்த தவெக உறுப்பினர்கள் சிவனேஸ்வரன் மற்றும் சரத்குமார் ஆகிய மூவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவலர்கள் ஆஜர்படுத்திய நிலையில், மூவரையும் 15 நள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேபோல், ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் நிறுவனர் ஃபெலிக்ஸ் ஜெரால்டையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூரில் இச்சம்பவம் தொடர்பாக தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன், கரூர் மத்திய மாநகர தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்கள்.