பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட சென்னை நகரத்தின் உள்ளாட்சி அமைப்பாக பெருநகர சென்னை மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. நாளொன்றுக்கு 5000 முதல் 5200 மெட்ரிக் டன் அளவிலான திடக்கழிவுகள் மாநகராட்சி ஊழியர்களால் சேகரிக்கப்படுகின்றன.
ஆனால் சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு பொது இடங்களில் பொது மக்களும், தனியார் நிறுவனங்களும் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளைக் கொட்டுவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நடைமுறையை தடுக்கும் வகையிலும், பொது மக்களிடையே பொறுப்பான கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும், பொது இடங்களில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ. 500-ல் இருந்து ரூ. 5000 ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் சட்டவிரோதமாக பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கும் வகையில், சம்பவ இடத்திலேயே டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.
இதற்காகக் காவல்துறையினர் அபராதம் விதிக்கப் பயன்படுத்துவதைப் போன்ற ஒரு டிஜிட்டல் கருவியை சோதனை அடிப்படையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இத்திட்டத்துக்காக முதற்கட்டமாக 500 கருவிகளைக் கொள்முதல் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.