நாய், பூனை வளர்க்க உரிமம் கட்டாயம்: சென்னை மாநகராட்சி ஆணையர்  @chennaicorp
தமிழ்நாடு

நாய், பூனை வளர்க்க உரிமம் கட்டாயம்: சென்னை மாநகராட்சி ஆணையர்

"வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும்".

யோகேஷ் குமார்

நாய், பூனை போன்ற பிராணிகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த 5 வயது குழந்தையை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக நாயின் உரிமையாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரிடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

அவர் பேசியதாவது: “குழந்தையைக் கடித்தது ராட்வீலர் நாய் என்று தெரியவந்துள்ளது. சிறுமியை கடித்த நாய்களுக்கு உரிமையாளர்கள் வளர்ப்பு உரிமம் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஏன் உரிமம் பெறவில்லை என்பதை கேட்டு உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். தெருவில் திரியும் நாய்களாக இருந்தாலும் அதற்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்று மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்றார்.