ANI
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்தல்: உயரதிகாரிக்குத் தொடர்பு

ராம் அப்பண்ணசாமி

சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் விமான நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவரின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த 2 மாதங்களில் இலங்கையில் இருந்து சென்னைக்கு ரூ. 167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்க நகைகள் பயணிகள் மூலமாக கடத்திவரப்பட்டுள்ளது சுங்கத்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கடத்தலுக்கு விமான நிலையத்தில் உள்ள `ஏர் ஹப்’ என்றழைக்கப்படும் பரிசுக் கடையின் ஊழியர்கள் உதவியுள்ள விஷயம் சுங்கத்துறையின் விசாரணையில் வெளிவந்துள்ளது.

இந்தக் கடத்தல் தொடர்பாக கடை ஊழியர்கள் சபீர் அலி உள்ளிட்ட 7 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் முன்பு கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சபீர் அலி ஒரு யூட்டியூபர் என்பதும், எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் விமான நிலையத்தில் அவர் கடை வைத்துள்ள விஷயமும் தெரிய வந்துள்ளது.

விமான நிலையத்தில் இணை பொது மேலாளராக பணியாற்றி வரும் செல்வ நாயகம் என்ற நபர் சபீர் அலிக்கு கடை வைக்க அனுமதி பெற உதவியதாக விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள செல்வ வினாயகத்தின் இல்லத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்தத் தங்க கடத்தலில் விமான நிலையத்தில் உள்ள மேலும் சில கடைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சுங்கத்துறையால் ஊகிக்கப்படுகிறது.

ஏர் ஹப் பரிசுப் பொருள் கடையை விமான நிலையத்தில் திறக்க பாஜக பிரமுகர் பிருத்வியும் உதவியுள்ளதாக சபீர் அலி வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.