கோப்புப்படம் 
தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு: செல்வப்பெருந்தகை vs துரைமுருகன்! | Selvaperunthagai | Duraimurugan |

"தவறையெல்லாம் நீங்கள் செய்துவிட்டு அதை நியாயப்படுத்துவது தான் வேதனையாக இருக்கிறது."

கிழக்கு நியூஸ்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 1 முதல் அக்டோபர் 24 வரை இயல்பைவிட அதிகளவு மழை பதிவாகியுள்ளதாக அரசு தரப்பில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக அணைகள் மற்றும் ஏரிகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளன.

நீர் வரத்தைக் கருத்தில் கொண்டு அணைகள் மற்றும் ஏரிகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகின்றன. கரையோர மக்களுக்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார் செல்வப்பெருந்தகை. இவருடைய தொகுதியின் கீழ் தான் செம்பரம்பாக்கம் ஏரி வருகிறது. தொகுதி எம்எல்ஏ என்ற அடிப்படையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்படுவது குறித்து தன்னிடம் தகவல் தெரிவிக்காதது ஏன் என அதிகாரிகளைக் கடிந்துகொண்டார் செல்வப்பெருந்தகை.

அதிகாரிகளிடம் பேசும்போது, "நான் நேற்று 12 மணியிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்து வருகிறேன். மாலை 4 மணிக்கு நீர் திறக்கப்படுகிறது என்கிற செய்தி வந்துகொண்டே இருக்கிறது. பூசணிக்காயை உடைக்கிறீர்கள், தேங்காய் உடைக்கிறீர்கள், பூஜை செய்கிறீர்கள். மக்கள் பிரதிநிதிக்கு ஒரு தலைவர் இருக்கிறார், ஒன்றியச் செயலாளர் ஒருவர் இருக்கிறார். எம்எல்ஏ, எம்பி இருக்கிறார்கள். ஒரு வார்த்தை சொன்னால் உங்களுக்கு என்ன கெட்டுவிடப்போகிறது. இவர்களெல்லாம் தண்ணீரைத் திறக்கக் கூடாது, தொடக் கூடாது என உங்களுக்கு அவ்வளவு கௌரவம்" என்றார் செல்வப்பெருந்தகை.

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இதற்கு எதிர்வினை ஆற்றினார்.

"செல்வப்பெருந்தகை போன்ற ஓர் அரசியல் கட்சித் தலைவர் இப்படி சொன்னதற்காக நான் வருத்தப்படுகிறேன். பொதுவாக உண்மை என்னவென்பதைத் தெரிந்து பேச வேண்டும். பருவமழை தொடக்க நேரத்தில் மேட்டூர் அணை நிரம்பியிருந்தால் தான் முதல்வர் அதைத் திறந்து வைப்பார். அந்த ஓர் அணையைத் தான் முதல்வர் திறந்து வைப்பார்கள். சின்ன சின்ன ஆற்றுக்கு/அணைக்கு இதுமாதிரி செய்ய மாட்டார்கள். அதற்காக அவர் அவ்வளவு பெரிதாகப் பேசுகிறார். கூப்பிட வேண்டும் என்றால் கூப்பிடலாம். அதில் தவறொன்றும் இல்லை. யாருமே கூப்பிட மாட்டார்கள்" என்றார் துரைமுருகன்.

ஆனால், துரைமுருகன் கருத்து தான் தனக்கு வருத்தமளிப்பதாக செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

"துரைமுருகன் பேசியது தான் எனக்கு வருத்தமாக உள்ளது. அவர் பொறுப்புள்ள அமைச்சர், மூத்த அமைச்சர், மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் இப்படி பேசலாமா? அப்படி பேசியது மிகவும் வருத்தமாக உள்ளது.

அதிகாரிகள் இது கட்டாயம் இல்லை என்கிறார்கள். அதெல்லாம் எம்எல்ஏ, எம்பி-க்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல என்று ஆங்கில பத்திரிகைக்குப் பேட்டி கொடுக்கிறார்கள்.

ஒரு மக்கள் பிரதிநிதிக்குச் சொல்வது கட்டாயமில்லையா? நாங்கள் ரகசியமாகத் திறந்துவிட்டு வருவோம், அதை ரகசியமாக வைத்துக்கொள்வோம், வெளிப்படைத்தன்மை இல்லை என்று அதிகாரிகள் கூறினால் இதைக் கூட ஒரு மக்கள் பிரதிநிதி கேட்கக் கூடாது என்று சொல்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம். இதற்கு என்னென்னமோ சாயம் பூசுகிறீர்களே. இது தவறில்லையா. சுயமரியாதையை விட்டுவிட வேண்டுமா?

நான் கூறியதே தவறு என்று என்னைக் குற்றவாளி ஆக்க முயற்சிக்கிறார்கள் அதிகாரிகள்.

மூத்த அமைச்சர் பேசியது எனக்கு வருத்தமளிக்கிறது. பத்திரிகை முன்பு நான் எங்கேயும் பேசவில்லை. இன்று சிறப்பான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இப்படியொரு ஆட்சி முன்னேறிச் செல்லும்போது இந்த அதிகாரிகள் ஒன்றிரண்டு பேர் செய்யும் தவறு எவ்வளவு பெரிய தவறு?

நீர்வளத் துறை அமைச்சருக்கு எப்படி வேதனை? நான் வேதனைப்படுகிறேன், என் தொகுதியைச் சார்ந்தவர்கள் வேதனைப்பட்டு இருக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் வேதனையில் இருக்கிறார்கள். இவர் ஏன் வேதனைப்பட வேண்டும்? வேதனைப்படுபவர்கள், வருத்தப்படுபவர்கள் நாங்கள் தானே?

ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் முதல்வருக்கும் எவ்விதக் குந்தகத்தையும் விளைவிக்கக் கூடாது என நாங்கள் அமைதியாக இருக்கிறோம். செய்யும் தவறையெல்லாம் நீங்கள் செய்துவிட்டு அதை நியாயப்படுத்துவது தான் வேதனையாக இருக்கிறது" என்றார் செல்வப்பெருந்தகை.

Chembarambakkam Lake Water Release Row: Duraimurugan's statement pained me, says Selvaperunthagai

Selvaperunthagai | Duraimurugan | Chembarambakkam Lake |