தமிழ்நாடு

டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா இல்லையா?: மத்திய அரசு முக்கிய தகவல்!

கடந்த 5 வருடங்களில் டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினார் எம்.பி. ஆர். சுதா.

ராம் அப்பண்ணசாமி

கடந்த 2020-ல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அன்றைய தமிழக அரசு அறிவித்தது குறித்த முன்மொழிவு மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2020-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களையும், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டம் 2020-ல் இயற்றப்பட்டது. இதன்படி இந்த மாவட்டங்களில் 2016-க்கு முன் அனுமதி பெற்ற ஹைட்ரோகார்பன் கிணறுகள் தவிர்த்து புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கவோ, மூடப்பட்ட கிணறுகளைத் திறக்கவோ அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 5 வருடங்களில் டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்தும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்தும், மக்களவையில் கேள்வி எழுப்பினார் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. ஆர். சுதா.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 வருடங்களாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவில்லை எனவும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 3 திட்டங்களுக்கான கால அளவை மட்டும் நீட்டித்துள்ளதாக பதில் அளித்துள்ளது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்.

மேலும் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரிய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும், பதில் அளித்துள்ளது சுற்றுச்சூழல் அமைச்சகம்.

அத்துடன், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை மத்திய அரசால் அறிவிக்க முடியும் என்றாலும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த முன்மொழிவும் பெறப்படவில்லை எனவும் பதிலளித்துள்ளது சுற்றுச்சூழல் அமைச்சகம்.