தமிழ்நாடு

மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு விட்டுக்கொடுக்கலாம்: பத்ரி சேஷாத்ரி

"தனியார் பள்ளிகளில் ஏற்கெனவே மும்மொழிக் கொள்கைதான் உள்ளது."

கிழக்கு நியூஸ்

மும்மொழிக் கொள்கைத் திட்டத்தில் மத்திய அரசு விட்டுக்கொடுத்து, மாநில அரசுக்கான நிதியை விடுவிக்கலாம் என பத்ரி சேஷாத்ரி தெரிவித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கை, ஹிந்தி திணிப்பு, தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய நிதி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கடந்த சில நாள்களாகப் பெரும் போராட்டம் வெடித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து கிழக்கு நியூஸ் யூடியூப் சேனலுக்கு அரசியல் விமர்சகரும், பதிப்பாளருமான பத்ரி சேஷாத்ரி நேர்காணல் அளித்துள்ளார்.

"மும்மொழிக் கொள்கை வேண்டுமா? வேண்டாமா? என்றால் என் பார்வையில் இருவரும் விட்டுக்கொடுக்கலாம். உதாரணத்துக்கு மத்திய அரசே சரி என்று விட்டுக்கொடுக்கலாம். நிதர்சனம் என்ன என்பது எங்களுக்குத் தெரிகிறது என்று விட்டுக்கொடுக்கலாம்.

வரும் நாள்களில் அரசுப் பள்ளிகளில் எத்தனை பேர் வந்து படிக்கப்போகிறார்கள்? அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. அவர்கள் அனைவரும் தனியார் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். தனியார் பள்ளிகளில் ஏற்கெனவே மும்மொழிக் கொள்கைதான் உள்ளது.

இதைவிட மோசம், மாநிலப் பாடத்திட்டத்தைக் கொண்ட பள்ளிகளே சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகளாக மாறி வருகின்றன. சிபிஎஸ்இ சென்றவுடனே மும்மொழித் திட்டம் வந்துவிடுகிறது.

உங்களுடைய ஊரிலேயே (தமிழ்நாடு) ஏகப்பட்ட பள்ளிகளில் மும்மொழித் திட்டம் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கிறது. கடைசியாக மீதமிருப்பது ஒருசில அரசுப் பள்ளிகளில் மட்டும்தான்.

இதற்கு விலக்கு கொடுத்துவிட்டு, இந்த பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கான நிதியைக் கொடுத்துவிடலாம். இதைப் பெரிய பிரச்னையாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டுக்கென்று ஒரு விலக்கு என்று அறிவித்துவிடலாம்.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு, மெட்ரிகுலேஷன் பள்ளியாக இருந்தாலுமே அவர்களுக்கு மூன்றாவது மொழி தேவையில்லை. ஆனால், மூன்றாவது மொழியை அவர்கள் ஏதேனும் ஒரு வழியில் இணைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

மாநில அரசின் அதிகாரத்தின் மீது மத்திய அரசு ஒருமுறை நுழைந்துவிட்டால், அது மீண்டும் நகராது" என்றார் பத்ரி சேஷாத்ரி.