மதுரையில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கப் பணியை கைவிடுவது குறித்து மத்திய சுரங்க அமைச்சர் கிஷண் ரெட்டி உறுதியளித்துள்ளதாக பதிவிட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
தன் எக்ஸ் சமூக சலைதளக் கணக்கில் அண்ணாமலை பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் கிஷண் ரெட்டிக்குக் கடிதம் எழுதினேன்.
அத்துடன் மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ. வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து தொலைப்பேசி வாயிலாக பேசி, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுமாறு மத்திய அமைச்சரை கேட்டுக் கொண்டேன்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுவது குறித்துப் பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி உறுதி அளித்துள்ளார். மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து திமுக அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இந்தச் சுரங்கம் அமைப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து, திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாடுகளையும், நமது பிரதமர் மேற்கொள்ளமாட்டார் என்பது உறுதி’ என்றார்