தமிழ்நாடு

ஃபெஞ்சல் பாதிப்பு: சென்னை வந்த மத்தியக்குழு!

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சீரமைப்புக்காக தமிழகத்திற்கு முதற்கட்டமாக ரூ. 944.80 கோடி நிவாரணம் விடுவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

ராம் அப்பண்ணசாமி

ஃபெஞ்சல் புயலால் தமிழகம், புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிட மத்தியக் குழு இன்று (டிச.6) சென்னைக்கு வருகை தந்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவ.30-ல் கரையைக் கடந்தது. தமிழகத்தின் 14 மாவட்டங்களும், புதுச்சேரியும் இதனால் பாதிப்புக்குள்ளாகின. 2,416 குடிசைகள், 721 வீடுகள், 963 கால்நடைகள் இழப்புகளுடன், 2.11 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான விவசாய-தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது.

இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏற்பட்டுள்ள சேதாரங்களைப் பார்வையிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை வழங்க, மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் பொன்னுசாமி, சோனமணி ஹேபம், சரவணன், தனபாலன் குமரன், ராகுல் பச்கேட்டி, பாலாஜி ஆகியோரைக் கொண்ட மத்தியக் குழு இன்று மாலை சென்னைக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து மாலை 7 மணி அளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுப் பிரதிநிதிகளை சந்திக்கின்றனர் மத்திய குழுவினர். இந்த சந்திப்பின்போது ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதாரங்கள் குறித்தும், மீள் கட்டமைப்புக்குத் தேவைப்படும் நிதி குறித்தும் விரிவான அறிக்கையை மத்தியக் குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை காலை முதல் ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர் மத்தியக் குழுவினர்.

இதற்கிடையே, ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சீரமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடி நிவாரணத்தை விடுவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். மத்தியக் குழுவின் ஆய்விற்குப் பிறகு கூடுதல் நிதி வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.