படம்: https://x.com/AIADMKOfficial
தமிழ்நாடு

சிபிஐ விசாரித்தால்தான் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய முடியும்: இபிஎஸ்

கிழக்கு நியூஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். சென்னை அயனாவரத்திலுள்ள இவருடையக் குடும்பத்தினரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ஆம்ஸ்ட்ராங்கின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி வந்துள்ளேன்.

இந்தப் படுகொலையை செய்துவிட்டு கொலையாளிகள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்கிற காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தோம். இந்தக் கொலை திட்டமிட்டு நடந்திருப்பதாகத் தான் தெரிகிறது. சமூகத்தில் எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும், இந்தப் பாதகச் செயலைச் செய்தவர்களை இந்த அரசு சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.

அண்மைக் காலமாக அரசியல் தலைவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் படுகொலை, சேலத்தில் கழக பகுதிச் செயலாளர் படுகொலை. இவற்றைத் தொடர்ந்து, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை. இப்படி தொடர்ந்து படுகொலைகள் அரங்கேறியிருக்கின்றன.

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுவிட்டது. அரசியல் தலைவர்களுக்கும் பாதுகாப்பில்லை, பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை. இந்த அரசு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரும், பிஎஸ்பி கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்தப் படுகொலையில் பலபேர் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கிறார்கள். தற்போது கைது செய்யப்பட்டுவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை என எண்ணுகிறார்கள்.

ஆகவே, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரின் சந்தேகங்களைப் போக்குவது அரசினுடையக் கடமை.

இந்த அரசு எடுத்த நடவடிக்கையைப் பார்க்கும்போது, இவர்களுடைய சந்தேகம் சரிதான் எனப்படுகிறது. ஆகவே, உண்மைக் குற்றவாளிகள் எவ்வளவு பெரிய ஸ்தானத்தில் இருந்தாலும், அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால், நடுநிலையோடு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க முடியும்" என்றார் எடப்பாடி பழனிசாமி.