பணமதிப்பிழப்பு சமயத்தில் ரூ. 450 கோடி மதிப்பிலான நோட்டுகளைக் கொடுத்து பினாமி பெயரில் சர்க்கரை ஆலையை வாங்கியதாக சசிகலா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் பத்மாவதி சக்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதனை தினேஷ் பட்டேல் என்பவர் நிர்வகித்து வந்தார். இந்நிலையில், சர்க்கரை ஆலை அண்மையில் கடன் மோசடி செய்ததாக வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் சிபிஐ விசாரணையத் தொடங்கியது.
விசாரணையில், அந்த ஆலையை வி.கே. சசிகலா வாங்கியது தெரிய வந்தது. பணமதிப்பிழப்பு சமயத்தில் சசிகலா, ரூ. 450 கோடி மதிப்பிலான ரூ. 500 மற்றும் ரூ, 1000 நோட்டுகளைக் கொடுத்து அந்த ஆலையை வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் பெயரை மாற்றாமல் பினாமி பெயரில் ஆலையை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. மேலும், இது தொடர்பாக ஒப்பந்தம் போடப்படிருப்பதும், அதில் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் கையெழுத்து போட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக, 2019-ல் சசிகலா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் போலி நிறுவனங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்ததுடன் ரூ. 1,600 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். இந்நிலையில், பினாமி பெயரில் சொத்துக்களை வாங்குவது சட்டவிரோதம் என்பதால், சசிகலா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
VK Sasikala | CBI | Demonetization |