ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சமூக ஆர்வலர் ஹென்றி டிபேன் தொடர்ந்த வழக்கில், `சிபிஐ நடத்திய விசாரணை சரியில்லை’ என்று கருத்து தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
கடந்த 2018-ல் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 நபர்கள் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. ஆனால் விசாரணையின் முடிவில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட காவல்துறையினருக்கு எதிராக எந்த ஒரு உத்தரவையும் மனித உரிமைகள் ஆணையம் பிறப்பிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹென்றி டிபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஹென்றி டிபேனின் வழக்கு தொடர்பாக இன்று (ஜூலை 15) நடந்த விசாரணையில், `இந்த சம்பவத்தில் இதுவரை எந்த ஒரு அரசு அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. யாரோ ஒருவர் பின்னால் இருந்து செயல்படுவதால் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது. துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணை சரியில்லை. இத்தனை ஆண்டுகளாக சிபிஐ விசாரணை நடந்தும் அதனால் எந்தப் பலனும் இல்லை’ என்று அதிருப்தி தெரிவித்தது உயர் நீதிமன்றம்.
`தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்து நீதிபதி அருணா ஜகதீசன் ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கை மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், `துப்பாக்கிச் சூடு நடந்த காலகட்டத்தில் பதவியில் இருந்த காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சில நபர்கள் மூலமாக பெரிய தொகை கைமாறியிருக்கலாம்’ என்றும் மனுதாரர் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரரின் வாதத்தைக் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், `துப்பாக்கிச் சூடு நடந்த காலகட்டத்தில் பதவியில் இருந்த காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவர்களின் சொத்துப்பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவுகள் தொடர்பாக 2 வாரங்களில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.