சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் காவல்துறை ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்ற அமர்விடம், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடியை பிரிக்கும் நோக்கத்துடன் சிறுவனை கடத்திய வழக்கில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி. குப்பம் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்திக்கு, அரசு வாகனத்தைக் கொடுத்து உதவியதாக காவல்துறை ஏடிஜிபி ஜெயராம் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஜெயராமிடம் 10 மணிநேரத்திற்கும் மேலாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஏடிஜிபியை தமிழக உள்துறை செயலர் பணியிடை நீக்கம் செய்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் கைது உத்தரவு மற்றும் பணியிடை நீக்க உத்தரவை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் புய்யான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (ஜூன் 18) விசாரணைக்கு வந்தது.
பணியிடை நீக்கம் குறித்து தமிழக அரசுக்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அதை திரும்பப் பெறுவது குறித்த நிலைபாட்டைக் கேட்டு தெரிவிக்குமாறு கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
வழக்கு விசாரணை இன்று (ஜூன் 19) மீண்டும் நடைபெற்றபோது, சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் ஏடிஜிபி ஜெயராம் மீது எடுக்கப்பட்ட பணியிடை நீக்க நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஏடிஜிபி மீதான வழக்கு விசாரணையை சிபிசிஐடி போன்ற வேறு துறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரையை தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த மேல்முறையீட்டு வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஏடிஜிபியை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தனர். அதேநேரம், ஏடிஜிபியை பணியிடை நீக்கம் செய்த தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.