படம்: twitter.com/maiamofficial
படம்: twitter.com/maiamofficial
தமிழ்நாடு

சாதியம்தான் எனது எதிரி: கமல் ஹாசன்

கிழக்கு நியூஸ்

அரசியலில் என்றும் சாதியம் தான் தன்னுடைய எதிரி என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. எனினும், இந்தக் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளிக்கும் வகையிலும், 2025 மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓர் இடம் ஒதுக்கும் வகையிலும் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் அடிப்படையில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்ள மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது.

இதுதொடர்புடைய பிரசார வழிகாட்டுதல்கள் குழுக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கமல் ஹாசன் பேசியதாவது:

"சந்தர்ப்பவாதம் என்பது ஒரு வாதமே இல்லை என்பதுதான் என் கருத்து. சந்தர்ப்பம் என்று ஒன்று இருக்கலாம். வாதம் என்பதைத் தனியாக வைக்க வேண்டும். நமது வாதத்தை சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு மாற்ற முடியாது.

ரிமோட்டை எடுத்து டிவியில் அடித்தவர்தானே அந்தக் கூட்டணிக்குச் செல்கிறீர்கள் என்ற விமர்சனம் என் மீது வைக்கப்பட்டது. ரிமோட் இன்னும் கையில்தான் உள்ளது, டிவியும் அதே இடத்தில்தான் உள்ளது. நம்ம வீட்டு ரிமோட், நம்ம வீட்டு டிவி.

ஆனால், அந்த டிவிக்கான மின்சாரத்தையும், ரிமோட்டுக்கான பேட்டரியையும் எடுக்கப் பார்க்கும் ஒரு சக்தி ஒன்றியத்தில் உருவாகிக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, ரிமோட்டை இனி நான் எறிந்தால் என்ன, வைத்திருந்தால் என்ன. அந்த மாதிரியான செயல்களுக்கு இனி அர்த்தமே இல்லாமல் ஆகிவிடும்.

நான் ஒரு தனிப்பட்ட மனிதரை என்றைக்கும் தாக்கியது இல்லை. மோடி மரியாதைக்குரிய பாரத பிரதமர். அவர் இந்த அரங்குக்குள் வந்தால்கூட, அவருக்கான உரிய மரியாதையை அளிப்பேன். ஆனால், இது அந்த மனிதருக்கான மரியாதை அல்ல. மக்களின் நாயகம் இன்னும் இருக்கிறது என்பதைச் சொல்வதற்காக தான் தலைவணங்குவேன். தன்மானத்தைவிட்டு தலை வணங்க மாட்டேன்.

அரசியல் களத்தில் என் எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன். நினைவு தெரிந்ததிலிருந்து, நினைவுபோகும் வரை என் அரசியல் எதிரி சாதியம்தான். மதச்சார்பற்ற இந்தியாவுக்காகப் போராடிதான் காந்தி உயிரிழந்தார். அந்த மதச்சார்பற்ற இந்தியாவுக்காகதான் நான் தேர்தலில் போட்டியிடவில்லை" என்றார் கமல் ஹாசன்.