மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா குறித்து அவதூறு பேசியதற்காக தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பில் கடந்த அக்.31-ல் அமரன் திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்குக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, `அமரன் படம் வெறுப்பின் விதைப்பு. இப்படம் வரலாற்றுத் திரிப்பு’ என்றார்.
தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எச்.ராஜா கடந்த நவ.7-ல் சென்னை விமான நிலையத்தில் வைத்து`மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேசத்துரோகிகள். இவர்களைப் போன்றவர்களை அரசு கண்காணிப்பில் வைக்க வேண்டும். அமரன் திரைப்படத்தை எதிர்ப்பதாகக் கூறி தேச துரோகத்தை பரப்புவதாக இருந்தால், நம் நாட்டை நேசிப்பவர்கள் இவர்களுக்கு எதிராக இருக்க வேண்டும்” என்றார்.
இதனை அடுத்து அவரது பேச்சை மேற்கோள்காட்டி, எச்.ராஜாவின் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமையை குலைக்கும் விதமாக பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 192 (கலவரத்தை உண்டாக்கும் பேச்சு), 196, 353 (அவதூறு பரப்புதல்) மற்றும் 353(2) ஆகியவற்றின் கீழ் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.