சென்னை துறைமுகத்தில் நேற்று (டிச.17) இரவு கட்டுப்பாட்டை இழந்து காருடன் கடலுக்குள் விழுந்த ஓட்டுநரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடலோர காவல்படை அதிகாரி ஜொகேந்திர காண்டாவை காரில் அழைத்துச் செல்ல, நேற்று இரவு தற்காலிக ஓட்டுநராக சென்னை துறைமுகத்திற்குச் சென்றுள்ளார் முகமது ஷாகி. அதிகாரியை அழைத்துக்கொண்டு திரும்பி வந்தபோது, ஷாகியின் கட்டுப்பாட்டை இழந்து கார் கடலுக்குள் பாய்ந்தது.
இதைத் தொடர்ந்து கார் கண்ணாடியை உடைத்து வெளியே வந்து, கடலில் நீந்தி உயிர் தப்பினார் அதிகாரி காண்டா. அவரை கடலோர காவல்படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை அடுத்து தீவிரமான தேடுதல் முயற்சிக்குப் பிறகு கடலில் இருந்து கார் மீட்கப்பட்டது. ஆனால் காருக்குள் ஓட்டுனர் ஷாகி இல்லை.
இரவு நேரம் என்பதால், கடலுக்குள் ஷாகியை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை தேடும் பணி இன்று காலையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை துறைமுகத்திற்கு வெளியே காத்திருந்த ஷாகியின் உறவினர் ஒருவர் சன் நியூஸுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு,
`நேற்று அவர் மாற்று ஓட்டுனராக வந்திருக்கிறார். வந்த இடத்தில் இப்படி ஒரு அசம்பாவித சம்பவம் நடைபெற்றுவிட்டது. உள்ளே என்ன நடக்கிறது என எங்களுக்குத் தெரியவில்லை. பொறுப்பான எந்த ஒரு பதிலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களால் எந்த அதிகாரியையும் பார்க்கமுடியவில்லை.
இரவே இங்கு வந்துவிட்டோம் ஆனால் எந்த ஒரு தகவலும் எங்களுக்கு இதுவரை தெரியப்படுத்தவில்லை. யாரைப் பார்ப்பது என தெரியவில்லை’ என்றார்.