ANI
தமிழ்நாடு

சினிமா புகழை மட்டுமே வைத்து எல்லாவற்றையும் ஓரம்கட்டிவிட முடியாது: விஜய் குறித்து திருமாவளவன்

அதிலும் இளைய தலைமுறையினர் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

ராம் அப்பண்ணசாமி

வெறும் சினிமா புகழை மட்டுமே மூலாதாரமாக வைத்து எல்லாவற்றையும் ஓரம்கட்டிவிட முடியாது என்று விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.

திருவண்ணாமலையில் இன்று (பிப்.26) செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம், விஜயின் அரசியல் பிரவேசம் திராவிட, ஜாதி, மத ரீதியிலான அரசியல் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்படுத்துவதற்கு உள்ள வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,

`இப்போதுதான் அவர் தொடங்கியுள்ளார், அதற்குள் பின்னடைவு குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். அவர் முதலில் ஒரு தேர்தலை சந்திக்கட்டும். மக்கள் எந்த அளவுக்கு அவரை ஏற்றுக்கொள்கிறார்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். அந்த முடிவுகளை வைத்து மட்டுமே யாருக்குப் பின்னடைவு என்பதைக் கூற முடியும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இதைப் போன்ற புதிய புதிய வரவுகள் தேர்தல் களத்தில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனாலும் கூட அவர்களால் இதுவரை பெரிய அளவில் சாதிக்க முடிந்ததில்லை. தற்போது உள்ள சூழலில் கலைஞரும், ஜெயலலிதாவும் இல்லை என்ற ஒரு கணக்கை மட்டும் வைத்து திமுகவையும், அதிமுகவையும் பலவீனப்படுத்திவிட முடியும் என்று கணக்குப்போடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவைத் தாண்டி முற்போக்கு ஜனநாயக சக்திகள், சமூக நீதி அரசியலை பேசும் கட்சிகள், புரட்சியாளர் அம்பேதகர், தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் போன்ற மாமனிதர்களின் கொள்கைகளைப் பரப்பும் கட்சிகள், கருத்தியல் சார்ந்து மக்களை அமைப்பாக்கி, அணிதிரட்டக்கூடிய கட்சிகள், விசிக உள்ளிட்ட பல கட்சிகள் இருக்கிறோம்.

எனவே, வெறும் சினிமா புகழ் போன்றவற்றை மட்டுமே மூலாதாரமாக வைத்து எல்லாவற்றையும் ஓரம்கட்டிவிட முடியும் என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விவரமானவர்கள். அதிலும் புதிய இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

அவ்வளவு எளிதாக தமிழ்நாட்டு இளம் தலைமுறையினரை ஏய்த்துவிட முடியாது, ஏமாற்றிவிட முடியாது. உரிய முடிவுகளை தேர்தல்தான் சொல்லும், உணர்த்தும்’ என்றார்.