மறைந்த ஆர்.எம். வீரப்பன் 
தமிழ்நாடு

என் வாழ்நாளில் ஆர்.எம். வீரப்பனை மறக்கவே முடியாது: ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

"எனக்கும், ஆர்.எம். வீரப்பனுக்கும் இடையிலான நட்பு மிக ஆழமானது."

கிழக்கு நியூஸ்

எம்.ஜி.ஆர். கழக நிறுவனரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (98) மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

எம்ஜிஆர், ஜானகி ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம். வீரப்பன். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அரசியல் இல்லாமல், திரைத் துறையிலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக இருந்துள்ளார்.

எம்ஜிஆர் நடித்த காவல்காரன், இதயக்கனி, ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம், பாட்ஷா, கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.

வயது மூப்பு காரணமாக அரசியலிலிருந்து விலகி இருந்த ஆர்.எம். வீரப்பன் இன்று பிற்பகல் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனை வளாகம் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். இரங்கல் செய்தியையும் அவர் வெளியிட்டார்.

இவரது உடல் தியாகராய நகரிலுள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆர்.எம். வீரப்பன் மறைவு குறித்து ரஜினிகாந்த் கூறியதாவது:

"ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார் ஆர்.எம். வீரப்பன். எம்ஜிஆரின் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என அனைத்திலும் அவருக்கு வலது கையாக இருந்தவர் ஆர்.எம். வீரப்பன்.

இவரால் உருவாக்கப்பட்ட இவருடைய பல்வேறு சிஷ்யர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி, கல்வி நிறுவனங்களின் அதிபர்களாகி பெயர், புகழு் மற்றும் பணத்துடன் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆர்.எம். வீரப்பன் எப்போதும் பணத்தை நோக்கிச் சென்றது கிடையாது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று அண்ணா சொன்னதைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர் இவர்.

எனக்கும், ஆர்.எம். வீரப்பனுக்கும் இடையிலான நட்பு மிக ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. என் வாழ்நாளில் அவரை மறக்கவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவர் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்றார் ரஜினிகாந்த்.