தமிழ்நாடு

காலை உணவுத் திட்டத்தை திராவிட மாடல் திட்டம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது: அண்ணாமலை

ராம் அப்பண்ணசாமி

சேலத்தில் இன்று (ஜூலை 15) பெருந்தலைவர் காமராஜின் பிறந்தநாளை ஒட்டி அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை காலை உணவுத் திட்டத்தை திராவிட மாடல் திட்டம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்தார்.

அண்ணாமலை அளித்த பேட்டியின் சுருக்கம்:

`2020 புதிய கல்விக் கொள்கையில் காலை உணவுத் திட்டத்தை ஊக்குவித்திருக்கிறது மத்திய அரசு. புதிய கல்விக் கொள்கையில் கொண்டுவந்துள்ள திட்டங்களை ஒரு மாநில அரசு முழுமையாக நிறைவேற்ற ஆரம்பித்தால் அதற்கான நிதியுதவியை மத்திய அரசு கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் தமிழக அரசு விதண்டாவாதமாக நாங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கின்றனர்.

இந்தக் காலை உணவுத் திட்டத்தைப் புதிதாக நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம் என்று சொல்வது வேடிக்கையானது. காலை உணவுத் திட்டத்தைக் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும், ஆனால் அதை திராவிட மாடல் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. காலை உணவுத் திட்டமோ, மதிய உணவுத் திட்டமோ எல்லா குழந்தைகளுக்கும் உணவை சத்தாக கொடுக்க வேண்டும்.

இதில் நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் மத்திய அரசு அதைக் கொடுக்கத் தயாராக இருக்கிறது. இத்தனை ஆண்டு கழித்து மாநிலத்தில் கல்விக் கொள்கைகாக ஒரு குழு அமைத்து அவர்கள் அறிக்கை அளித்திருக்கிறார்கள். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எடுத்து அதைப் பெயர் மாற்றி வைத்திருக்கிறார்கள்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீட் தேர்வு இருக்க வேண்டும், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில், இந்த ஆண்டுதான் தமிழக மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்கின்றனர். நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையில் இருக்கும் குளறுபடிகளை உச்ச நீதிமன்றம் ஆராய்ந்து வருகிறது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஒரு சில இடங்களில் நடந்துள்ளது.

நீட் தேர்வை முன்வைத்து திமுக தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது. நாங்கள் வெள்ளை அறிக்கை கேட்கிறோம். எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன்பும், பின்பும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள் என்ற தகவல்களைக் கொடுங்கள். இந்த தகவல்கள் அனைத்தும் தமிழக அரசிடம் இருக்கிறது. தகவல்களைக் கொடுக்காமல் தமிழக அரசு வாய் பேச்சில் ஈடுபட்டு வருகிறது’.