தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

எதிர்காலத்தில் இதைப் போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காகவே இந்த வழக்கை நாங்கள் விசாரிக்கிறோம்

ராம் அப்பண்ணசாமி

2018-ல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொது மக்கள் போராட்டத்தில் தமிழக காவல்துறையால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹென்றி டிபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த ஜூலை 15-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ மேற்கொண்டு வரும் விசாரணை சரியில்லை என்று அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், `துப்பாக்கிச் சூடு நடந்தபோது பதவியில் இருந்த காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 29) நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காவல்துறை அதிகாரிகளின் சொத்துப்பட்டியலை எடுக்கக் கால அவகாசம் கோரினார்கள்.

அரசு வழக்கறிஞரின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்த நீதிபதிகள் காவல்துறை அதிகாரிகளின் சொத்துப்பட்டியலை 3 மாதத்துக்குள் முழுமையான அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ளும் விசாரணைக்கு அரசு செயலாளரும், டிஜிபியும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர்.

மேலும், `துப்பாக்கிகளைப் பார்த்து உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்து வைப்பது எப்படி நியாயமாகும்? எதிர்காலத்தில் இதைப் போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காகவே இந்த வழக்கை நாங்கள் விசாரிக்கிறோம். இதில் எந்த உள்ளோக்கமும் இல்லை’ என்றனர் நீதிபதிகள்.

இதற்குப் பிறகு இந்த வழக்கு விசாரணையை 3 மாதங்கள் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர் நீதிபதிகள்.