தமிழ்நாடு

திருப்பதி – காட்பாடி இடையே இரட்டை ரயில் வழித்தடம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இதன் மூலம், சுமார் 14 லட்சம் மக்களும் பயன்பெறுவார்கள் என்றும், ஆண்டுக்குக் கூடுதலாக 4 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

திருப்பதி – காட்பாடி இடையிலான ரயில் வழித்தடத்தை, இரட்டை வழித்தடமாக மாற்ற மத்திய அமைச்சரவை இன்று (ஏப்.9) ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று தில்லியில் கூடியது. இதில், திருப்பதி – காட்பாடி இடையிலான 104 கி.மீ. ரயில் வழித்தடத்தை இரட்டை வழித்தடமாக மாற்றுவதற்கான புதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், கல்வி மற்றும் மருத்துவ சேவைகளின் முக்கிய மையங்களாக விளங்கும் வேலூர் மற்றும் திருப்பதியை இணைக்கும் வகையில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், ரூ. 1,332 கோடி பொருட்செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் தகவல் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக ரூ. 86,507 கோடி பொருட்செலவில் சுமார் 2,869 கி.மீ. ரயில் வழித்தடத்தை மேம்படுத்த, மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் 23 முக்கிய ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம், இந்த வழித்தடத்தில் உள்ள 400 கிராமங்களும் சுமார் 14 லட்சம் மக்களும் பயன்பெறுவார்கள் என்றும், இந்த வழித்தடத்தில் ஆண்டுக்குக் கூடுதலாக 4 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் திருப்பதியில் தொடங்கி, சித்தூர் வழியாக தமிழகத்தின் காட்பாடியில் நிறைவு பெறும் இந்த வழித்தடத்தில் 15 ரயில் நிலையங்கள், 17 பிரதான மேம்பாலங்கள், 327 சிறிய மேம்பாலங்கள் ஆகியவை உள்ளன.