தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

5 மணி நிலவரப்படி 77.73 % வாக்குகள் பதிவாகியுள்ளன

ராம் அப்பண்ணசாமி

இன்று காலை (ஜூலை 10) 7 மணிக்குத் தொடங்கிய விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 6 மணி அளவில் நிறைவு பெற்றது. 5 மணி நிலவரப்படி 77.73 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ல் உடல்நலக் குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை கடந்த ஜூன் 10-ல் அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.

தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுகவும், தேமுதிகமும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தன.

வேட்பு மனுக்கள் சரி பார்க்கப்பட்ட பிறகு, அதிகாரப்பூர்வமாக 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் முக்கிய வேட்பாளர்கள் அன்னியூர் சிவா, சி. அன்புமணி ஆகியோர் தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள்.

இன்று விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் காலியாக இருக்கும் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.