தமிழ்நாடு

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10-ல் இடைத்தேர்தல்!

ராம் அப்பண்ணசாமி

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுகவைச் சேர்ந்த புகழேந்தி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராகத் தேர்வானார். 71 வயதான புகழேந்தி, 18வது மக்களவைத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவந்தபோது உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6-ல் மரணமடைந்தார்.

இதனை அடுத்து ஏப்ரல் 8-ல் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. காலியாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். இந்தத் தொகுதிகளில் தமிழகத்தின் விக்கிரவாண்டி தொகுதியும் ஒன்று.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூன் 14-ல் தொடங்கி, ஜூன் 21-ல் நிறைவுபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூலை 10-ல் வாக்குப்பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் ஜூலை 13-ல் எண்ணப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.