தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய உத்தரவு

ராம் அப்பண்ணசாமி

ஜூன் 5-ல் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக பெரம்பூரில் உள்ள பந்தார் கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 6-ல் ரீட் மனு தாக்கல் செய்தார் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி. மனு மீதான விசாரணை இன்று காலை 8.30 மணிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங்கை அடக்கம் செய்ய அரசு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்ததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் 12 மணிக்கு நடந்தது. அப்போது திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய நிலம் அளிக்க முன்வந்தார் அவரது உறவினர் காஞ்சனா தேவி.

அப்போதும் முடிவு எட்டப்படாததால் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2.15 மணிக்கு விசாரணை தொடங்கியபோது பொத்தூரில் உள்ள நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய ஒப்புக்கொண்டார் பொற்கொடி தரப்பு வழக்கறிஞர்.

இதை அடுத்து பொத்தூரில் உள்ள நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்து கொள்ள உத்தரவிட்டார் நீதிபதி பவானி சுப்பராயன். `கண்ணியமான முறையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அடக்கம் செய்ய வேண்டும், இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற போதுமான பாதுகாப்பை அளிக்க வேண்டும்' என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார் நீதிபதி பவானி சுப்பராயன்.

மேலும், `பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங்குக்கு மணிமண்டபம் அமைக்க விரும்பினால் அரசு அனுமதியுடன் அதைக் கட்டிக் கொள்ளலாம். இந்த வழக்கில் தமிழக அரசு பெருந்தன்மையுடன் செயல்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார் நீதிபதி பவானி சுப்பராயன்.