தமிழ்நாடு

திமுகவின் ஆர்.எஸ். பாரதி மீது மான நஷ்ட வழக்கு தாக்கல்: அண்ணாமலை

ஆர்.எஸ். பாரதியின் பேச்சுகளை எதிர்க்காமல் பிறர் பயத்தால் ஒதுக்கிப் போவதால்தான் அவரது பேச்சு ஆணவத்தைத் தாண்டி அட்டூழியமான முறையில் போய்க்கொண்டிருக்கிறது

ராம் அப்பண்ணசாமி

இன்று (ஜூலை 10) காலை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அவரது பேட்டியின் சுருக்கம் பின்வருமாறு:

`ஜூன் 23-ல் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 65-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். அதே நாளில், இதற்கு (கள்ளச்சாராய மரணங்கள்) காரணம் அண்ணாமலையின் கூட்டுச்சதி, (அதாவது) எங்கிருந்தோ கள்ளச்சாராயத்தைக் கொண்டு வந்து அதை கள்ளக்குறிச்சியில் நான் கொடுத்தேன், அதனால் மக்கள் இறந்துவிட்டனர் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சொன்னார்.

அவர் சொன்னது எனக்கு துக்கத்தை ஏற்படுத்தியது, ஏனென்றால் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் வரவேண்டும் என்று போரடிக்கொண்டிருக்கிறேன். அவர்கள் எத்தனை பொய்களையும், அவதூறுகளையும் பேசினாலும் கடந்த 3 வருடங்களில் நான் (யார் மீதும்) அவதூறு வழக்கு தொடுத்ததில்லை.

இப்போது ஏன் ஆர்.எஸ். பாரதி மீது அவதூறு வழக்கு தொடுக்கிறேன் என்றால், அவரது பேச்சு எல்லை மீறி சென்றுவிட்டது. இதனால் நீதிமன்றத்தில் அவர் மீது மான நஷ்ட வழக்கை நான் தொடுத்திருக்கிறேன். இதில் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருக்கிறேன். இந்த ஒரு கோடி ரூபாயை அவரிடம் இருந்து பெற்று கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கேயே ஒரு மறுவாழ்வு மையம் அமைக்கப் போகிறோம்.

மேலும் ஆர்.எஸ். பாரதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறேன். இந்த வழக்கை இறுதிவரை தொடர்ந்து நடத்துவோம். இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.பாரதியை நாங்கள் சிறைக்கு அனுப்பப்போகிறோம்.

ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுகளை எதிர்க்காமல் பிறர் பயத்தால் ஒதுக்கிப் போவதால்தான் அவரது பேச்சு ஆணவத்தையும், கர்வத்தையும் தாண்டி அட்டூழியமான முறையில் போய்க்கொண்டிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆர்.எஸ். பாரதி என்னை சின்னப் பையன் என்றார், இந்த சின்னப் பையன் ஆர்.எஸ். பாரதிக்கும் திமுகவுக்கும் இந்த வழக்கை வைத்து என்ன செய்கிறான் என்று பார்த்துவிடலாம்’.