தமிழ்நாடு

இந்திய மக்களின் கொந்தளிப்புக்குப் பாஜக பதில் சொல்லியே ஆக வேண்டும்: ஸ்டாலின்

ராம் அப்பண்ணசாமி

இன்று (ஜூலை 27), பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தில்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தைத் தான் புறக்கணித்ததற்கான காரணங்களை விளக்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வெளியிட்டுள்ளார். காணொளியில் ஸ்டாலின் பேசியதன் சுருக்கம் பின்வருமாறு:

`பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டிய நான், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதி நிலை அறிக்கையால் நீதி கேட்டு மக்கள் மன்றமான உங்கள் முன்பு பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளேன்.

ஒரு அரசு தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்ந்து உழைக்கவேண்டும். இப்படித்தான் தமிழக் அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இந்தப் பெருந்தன்மை மத்திய பாஜக அரசிடம் இல்லை. இவர்கள் அரசியல் நோக்கத்துடன் அரசு நடத்துவதற்கான எடுத்துக்காட்டு கடந்த ஜூலை 23-ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைப் புறக்கணித்த மாநில மக்களை பட்ஜெட்டில் பழிவாங்கியுள்ளது மத்திய அரசு. இது அவர் (மோடி) ஏற்றுக்கொண்ட பதவிப்பிரமாணத்துக்கு முரணானது. மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டைப் புறக்கணித்து வருகிறது. பெரும்பான்மை கிடைக்காமல், கூட்டணிக்கட்சிகளின் தயவுடன் மத்தியில் ஆட்சியமைத்துள்ளது பாஜக. ஆனாலும் அவர்கள் திருந்தவில்லை.

இத்தனை ஆண்டுகளாக ஒப்புக்காவது ஒரு திருக்குறள் பட்ஜெட்டில் இருக்கும். இந்த முறை அதுவும் இல்லை. 2020-ல் மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டி, 2021-ல் மத்திய-மாநில அரசுகள் இணைந்து ரூ. 63,000 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை மத்திய அரசு ஒரு ரூபாய் கூடத் தரவில்லை.

இதே மத்திய அரசு கடந்த மூன்றாண்டுகளில் பல நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி அளித்துள்ளது. இது நியாயமா? தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை வழங்கியிருக்கிறார் மத்திய நிதியமைச்சர்.

தேசியக் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துக் கையெழுத்துப் போட்டால் மட்டுமே, அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு நிதியை விடுவிப்போம் என்று அடம் பிடிக்கிறார்கள். பள்ளிக் குழந்தைகளின் கல்வி பாழாகும் என்று ஒரு துளி கூட அவர்களுக்குக் கவலை இல்லை.

மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் மாநிலங்களால் விதிக்கப்படும் முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைப்போம் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதியமைச்சர். உங்களுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது?

இது தமிழ்நாட்டை மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்திய நாட்டையும் பழிவாங்கும் பட்ஜெட். மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள், மேலும் மேலும் தோல்விகளை சந்திப்பீர்கள். இந்திய மக்கள் மனங்கள் கொந்தளிப்பில் இருக்கிறது. இதற்கு பாஜக பதில் சொல்லியே ஆக வேண்டும்’.