கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரயில் சேவையை மத்திய அரசு நிராகரிக்கவில்லை, தமிழ்நாடு அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் திருத்தம் கோரியிருக்கிறது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திருச்சியில் பாஜக சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த விளக்கக் கூட்டம் நடந்தது. இதில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள். அப்போது செய்தியாளர்களிடம் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
“பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது கடந்த இரண்டு முறையும் அவரை முதலமைச்சர் சந்திக்கவில்லை. சென்றமுறை கோவைக்குப் பிரதமர் மோடி வந்தபோது கூட அமைச்சர் சுவாமிநாதன்தான் வந்து வரவேற்றார். முதலமைச்சர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார். தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலமைச்சர்தான் பிரதமர் வரும்போது அவரைச் சந்தித்துக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் எல்லாம் முதலமைச்சர்கள் வருகிறார்கள்.
கோவையிலும் மதுரையிலும் மெட்ரோ வர வேண்டாம் என்ற எண்ணம்தான் முதலமைச்சருக்கு இருக்கிறது. அவருக்கு மெட்ரோ வர வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் விரிவான திட்ட அறிக்கையைச் சரியான முறையில் தயாரித்துக் கொடுத்திருப்பார்கள். இவர் அதை மேற்பார்வை செய்திருப்பார். ஒருவேளை விரிவான திட்ட அறிக்கையை நாங்கள் சரியாகத்தான் கொடுத்தோம். ஆனால் நிராகரித்துவிட்டார்கள் என்றால், பிரதமர் வந்தபோது சந்தித்து முதலமைச்சரே முறையிட்டிருப்பார். இங்கெல்லாம் கவனம் கொடுக்காத முதலமைச்சர் இன்று அரசியலுக்காகத் தான் தில்லி சென்று பிரதமரைப் பார்க்கத் தயார் என்று அறிக்கை வெளியிடுகிறார். பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தபோதே முதலமைச்சர் பார்க்கவில்லை. தில்லிக்குச் சென்று பார்த்து என்ன செய்துவிடப்போகிறார்?
கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ சேவை கோரி தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கையில் என்ன தவறு என்பதை நாங்களும் பல இடங்களில் குறிப்பிட்டு பேசியிருக்கிறோம். கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பும் நடத்தியிருக்கிறார்.
ஆக, மெட்ரோ ரயில் சேவையைத் தரவே மாட்டோம் என்று மத்திய அரசு நிராகரித்துவிடவில்லை. தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கை தவறாக இருக்கிறது. அது மெட்ரோ சேவை கோரும் வரைமுறைகளுக்கு உட்பட்டு இல்லை. அதைச் சரி செய்யுங்கள். இந்தத் திட்ட அறிக்கையை அங்கீகரிக்க முடியாது என்றுதான் கூறியிருக்கிறது.
மாநில அரசு நிபுணர்களுடன் கலந்தாலோசித்து சரியான விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கோவையில் உள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினரே மெட்ரோ சேவை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். ஆனால் திமுகதான் இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்துகொண்டிருக்கிறது. பாஜக அல்ல.” என்றார்.
Former BJP state president Annamalai has said that the central government has not rejected the metro rail service in Coimbatore and Madurai, but has requested changes in the detailed project report submitted by the Tamil Nadu government.