திருப்புவனம் காவல் மரண வழக்கில் தொடர்புடைய நிகிதாவின் புகைப்படம் என்று குறிப்பிட்டு, தனது புகைப்படம் பரப்பப்படுவதாக, பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜினி காவல்துறையில் புகாரளித்துள்ளார்.
நகை திருட்டு புகாரின்பேரில், கடந்த ஜூன் 28 அன்று விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார்.
அஜித்குமார் மீது நகை திருட்டுப் புகார் அளித்த நிகிதா, மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர். திண்டுக்கலில் உள்ள எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் இவர் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ஜெயபெருமாள் துணை ஆட்சியர் பதவியில் இருந்து ஓய்வுபெற்றவர்.
அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நிதிகா மீது பணமோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே நிகிதா பாஜகவின் அனுதாபி என்றும் அவர் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் தொடர்புடையவர் என்றும் குறிப்பிட்டு, ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் அந்த புகைப்படத்தில் அண்ணாமலையுடன் இருப்பது பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜினி.
இந்நிலையில், காவல் மரண வழக்கில் தொடர்புடைய நிகிதா என்று கூறி, `என் மண், என் மக்கள்’ பாதயாத்திரையின்போது அண்ணாமலையுடன் எடுத்துக்கொண்ட தன்னுடைய புகைப்படம் சமூக வலைதளங்களில் தவறாகப் பகிரப்படுவதாகக் குறிப்பிட்டு, பொன்னேரி காவல் நிலையத்தில் ராஜினி புகார் அளித்துள்ளார்.