சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கை நகலை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அரசுப் பள்ளி மாணவரை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. இதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், வழிமுறைகளை வகுத்திடவும் தமிழ்நாடு அரசு சார்பில் கடந்தாண்டு ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவானது பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கடந்த 18 அன்று சமர்ப்பித்தது.
அரசுப் பள்ளிகளில் உள்ள ஜாதி அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும், பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கினால், நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது ஜாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது, தனியார் பள்ளிகளில் இடம்பெற்றுள்ள ஜாதி அடையாளங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும்போது ஜாதி அடையாளங்கள் ஒருபோதும் இடம்பெறாது என உறுதியளித்த பிறகே அனுமதி வழங்க வேண்டும், குறிப்பிட்ட ஒரு சாதி ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில், சம்பந்தப்பட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்படக் கூடாது என்பது போன்ற பல்வேறு பரிந்துரைகளை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தெரிவித்தது.
இந்தச் சூழலில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் மாமன்றக் கூட்டம் இன்று கூடியது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கூடிய முதல் கூட்டம் இது.
இந்தக் கூட்டத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையின் நகலை பாஜகவைச் சேர்ந்த 134 வார்டு கவுன்சிலர் உமா ஆனந்தன் கிழித்து எறிந்தார். மாமன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்த அவர், வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறியதாவது:
"ஒருதலைப்பட்சமாக ஓர் அறிக்கை. ஒருதலைப்பட்சமான ஒரு நீதிபதியை வைத்து தயாரிக்கப்பட்டுள்ள ஓர் அறிக்கை. அடுத்து ஆகமதுக்கு. அதற்கு ஒரு நீதிபதியை நியமிக்கிறார்கள். அந்த நீதிபதி கடவுள் மறுப்பு கொள்கையாளர். அவரை எப்படி ஆகமத்துக்குப் போடலாம். இதுவொரு கண்துடைப்பு நாடகம்.
இந்த அறிக்கைக்கு மாமன்றக் கூட்டம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கூறி அறிக்கையைக் கிழித்து எறிந்து வந்துள்ளேன். இதற்கு என்னை 'வெளியில் போ' என்றார்கள். என்னை வெளியேறச் சொல்வதற்கு அவர்கள் யார்?. திமுக உறுப்பினர்கள்தான் கூறினார்கள். அவர்களுடையப் பெயரைக் கூட என்னால் சொல்ல முடியும்.
இந்தச் சமயத்தில் ஏன் இதைப் பற்றி பேச வேண்டும் எனக் கேட்கிறார்கள். இந்தச் சமயத்தில் ஏன் நீங்கள் உதயநிதி ஸ்டாலின் குறித்து துதி பாடுகிறீர்கள்? முதல்வரைப் பற்றி துதி பாடுவது சரி. உதயநிதி ஸ்டாலின் குறித்து எதற்காக துதி பாட வேண்டும்" என்றார் அவர்.