பிஹார், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான பொறுப்பாளர்களை நியமித்து பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்துக்கு அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மூன்று மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா நியமித்துள்ளார்.
முதலில் வரவுள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், சி.ஆர். பாட்டில், உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேஷவ் மௌர்யா ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் மற்றும் திரிபுரா நாடாளுமன்ற உறுப்பினர் விப்லப் குமார் தேவ் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டுக்கான தேர்தல் பொறுப்பாளர்களாக வைஜெயந்த் பாண்டா, முரளிதர் மோஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வைஜெயந்த் பாண்டா பொறுப்பாளராகவும் முரளிதர் மோஹோல் இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியப் பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
யார் இந்த வைஜெயந்த் பாண்டா?
இவர் ஒடிஷாவிலிருந்து 5 முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்வானவர். நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்திலிருந்து 2019-ல் வெளியேறி பாஜகவில் இணைந்தார். பாஜகவின் தேசிய துணைத் தலைவராக உள்ளார். 2020 மற்றும் 2025 தில்லி சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தில்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறியதற்கு, பின்னணியிலிருந்து செயல்பட்டவர் வைஜெயந்த் பாண்டா. இத்தனைக்கும் முதல்வர் வேட்பாளர் என்பதை வெளிப்படையாக அறிவிக்காமலே தில்லி தேர்தலை எதிர்கொண்டது பாஜக.
2021-ல் அசாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 143 நாள்களுக்கு முன்பு தான் வைஜெயந்த் பாண்டா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் 75 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது பாஜக.
Election In-Charge | BJP | Tamil Nadu Election | Tamil Nadu BJP | BJP | Baijayant Jay Panda | Baijayant Panda | Murlidhar Mohol |