பைக் டாக்ஸி ANI
தமிழ்நாடு

பைக் டாக்ஸி செயலிகளை நீக்க வேண்டும்: ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை

யோகேஷ் குமார்

பைக் டாக்ஸி செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சாலை நெரிசலில் இருந்து தப்பிக்கும் விதமாகவும், குறைந்த கட்டணத்தை செலுத்தி நினைத்த இடங்களுக்கு செல்வதற்காகவும் பைக் டாக்ஸி செயலிகளை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து விட்டதாக சென்னையை சேர்ந்த ஆன்லைன் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பேசியதாவது:

“எங்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் மீட்டர் கட்டணம் மட்டுமே கிடைகிறது. வெள்ளை நிற வாகனப் பதிவெண் பலகை கொண்ட பைக் டாக்ஸிகளுக்கு இந்தியாவில் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் பைக் டாக்ஸி மூலம் பயணிகளை ஏற்றிச் செல்வது வழக்கமாக நடக்கிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. கவர்ச்சியான விளம்பரங்கள் மூலமாக தவறான வாக்குறிதிகளை அளித்து படித்த இளைஞர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் இதுபோன்ற வேலைகளுக்கு அழைத்து வருகின்றனர்.

பைக் டாக்ஸியால் பல மரணங்கள், பாலியல் தொல்லை போன்ற பல பிரச்னைகள் ஏற்பட்டும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ரேபிடோ செயலிக்கு நீதிமன்றம் தடை விதித்தும் சட்டவிரோதமாக இதனை ஓட்டி வருகின்றனர். எனவே, பைக் டாக்ஸி செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டும்” என்றார்.