விஜயின் பேச்சை விமர்சித்ததால் தனக்கு விஜயின் ரசிகர்களால் மிரட்டல் விடுக்கப்படுவதாக பிக்பாஸ் புகழ் ஜூலி காணொளி வெளியிட்டுப் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு, கடந்த பிப்ரவரி 23 அன்று வேலூர் அகரம்சேரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஜல்லிக்கட்டுக் காளையை வைத்துக் குட்டிக் கதை ஒன்று சொன்னார். அதில் ஆக்ரோஷமான ஜல்லிக்கட்டுக் காளையைப் புல்லுக்கட்டைக் காட்டி அடக்கிய சிறுவன் தான் தவெக என்று பேசினார்.
நடிகை ஜூலி விமர்சனம்
இதையடுத்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் புகழ்பெற்றவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான நடிகை ஜூலி அதனை விமர்சித்துக் காணோளி ஒன்றை அன்று வெளியிட்டிருந்தார். அதில், விஜயின் ரசிகர்கள் பெரும்பாலும் சிறுவர்களாகவும் இளைஞர்களாகவும் இருப்பதால், ஜல்லிக்கட்டுக் காளையைப் புல்லுக்கட்டைக் காட்டி அடக்க முடியும் அன்று நினைத்து அவர்கள் ஏதாவது செய்தால் அசம்பாவிதம் ஏற்படும் என்று எச்சரித்திருந்தார். மேலும் கரூரில் 50 பேர் உயிரிழந்தது போதும், அதை 500 ஆக்கிவிடாதீர்கள் என்றும் கூறி, விஜயை விமர்சித்திருந்தார்.
விஜய் ரசிகர்களால் மிரட்டல்
இந்நிலையில், அந்தக் காணொளியின் கருத்துப் பகுதியிலும் சமூக ஊடகத்தின் பிற தளங்களிலும் விஜயின் ரசிகர்களால் தனக்கு மிரட்டலும் அச்சுறுத்தலும் விடுக்கப்படுவதாக ஜூலி தற்போது காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளர். கரூர் சம்பவம் நடந்து சில நாள்களுக்குப் பிறகு முதலமைச்சரைக் குற்றம் சாட்டி விஜய் வெளியிட்டிருந்த காணொளியின் பாணியிலேயே ஜூலை இதில் பேசியுள்ளார்.
அந்தக் காணொளியில் அவர் கூறியிருப்பதாவது:-
“விஜய் அண்ணா! உங்கள் வேலூர் பரப்புரையைப் பார்த்து, அதில் ஏதும் இல்லை என்ற ஆதங்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தேன். உங்கள் ரசிகர்கள். ஆம், அவர்கள் ரசிகர்கள் மட்டும்தான். ஏனென்றால் அவர்கள் இன்னும் அரசியல்வயப்படவில்லை. அவர்கள் அனைத்து சமூக ஊடகத் தளங்களிலும் என்னைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 18 வயதுக்கும் குறைவான இவர்களிடம் இருப்பதில் பெரும்பாலும் போலிக்கணக்குகளே. அதைவைத்து என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகப் பயந்து நான் அந்தக் காணொளியை நீக்கவும் மாட்டேன். என் கருத்துகளிலிருந்து பின்வாங்கவும் மாட்டேன்.
வீட்டிலோ அலுவலகத்திலோதான் இருப்பேன்
என்னை மிரட்டினால் பரவாயில்லை, என்னைச் சார்ந்தவர்களும் மிரட்டப்படுவதால் இதைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். விஜய் அண்ணா, உங்களுக்கு என்னைப் பழிவாங்க வேண்டுமென்றால் நான் என் வீட்டில் இருப்பேன், அல்லது என் அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் அவர்களை விட்டுவிடுங்கள்.
பனையூருக்கே வருகிறேன்
ஓ! நீங்கள் பனையூரை விட்டு வெளியில் வரமாட்டீர்கள் அல்லவா? நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன். நான் வேண்டுமென்றால் பனையூர் வருகிறேன். என்னைத் திட்டினால் அது என்னைத் திட்டிய மாதிரிதான். மக்களைத் திட்டிய மாதிரி என்று யாரையும் உள்ளே இழுத்துப் போட மாட்டேன். ஒரு பெண்ணுக்கு சமூக ஊடகத்தில் உங்கள் ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு மரியாதை, மதிப்பு, பாதுகாப்பும் இருக்கிறது என்பதை, நான் வெளியிட்ட காணொளிக்குக் கீழே உள்ள கருத்துப் பகுதியில் நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்” என்று பகிர்ந்துள்ளார்.
Bigg Boss fame Julie has released a video complaining that she is being threatened by Vijay's fans for criticizing his speech.