பாரதியார் மீது விமர்சனமா?: எள்ளுப் பேரன் வேதனை https://www.facebook.com/niranjan.bharathi
தமிழ்நாடு

பாரதியார் மீது விமர்சனமா?: எள்ளுப் பேரன் வேதனை | Bharathiyar |

எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி பல பேருக்கு இன்று அவர் ஆசான்...

கிழக்கு நியூஸ்

மகாகவி பாரதியார் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு‌ சதவிகிதம் கூட வாழாதவர்கள் அவரை அசிங்கமாக வசைபாடுவது எந்த விதத்தில் நியாயம் என்று பாரதியாரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த டிசம்பர் 11 அன்று மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது சென்னையில் விஜில் அமைப்பு சார்பாக நடந்த பாரதி பிறந்த நாள் விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, பாரதியாரைப் பற்றி உரையாற்றினார். அப்போது சீமான் தனது உரையில், திராவிடர் கழகத்தையும் திமுகவையும் சரமாரியாக விமர்சித்தார். குறிப்பாக, தமிழைப் பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று கூறியதாகவும், ஆனால் பாரதியார் எப்படியெல்லாம் புகழ்ந்திருக்கிறார் என்றும் ஒப்பிட்டுப் பேசினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் பலர் எதிர்வினை ஆற்றி வருகிறார்கள்.

இதற்கிடையில், சீமான் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பதிவிடும் கருத்துகளில் சிலர் பாரதியாரைப் பற்றியும் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள். இதையடுத்து, பாரதியார் குறித்த அவதூறு கருத்துகளுக்கு, அவரது வம்சாவளியான பாரதியாரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாரதியாரையும் பெரியாரையும் ஒப்பிட்டுப் பேசிய பிறகு, அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களைக் காட்டிலும் பாரதியார் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் அதிகமாக இருக்கின்றன. அது கூட வலிக்கவில்லை. அந்த விமர்சனங்கள் மிக மிகக் கீழ்த்தரமாகவும் அடிப்படை ஆதாரம் அற்றவையாகவும் இருப்பது மனத்தில் கொதிப்பையும் வேதனையையும் தருகிறது.

பாரதியார் மீது பெரியார் ஆதரவாளர்கள், திகவினர் விமர்சனங்கள் வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை அவை வரம்பு மீறி அவர்களின் வன்மத்தைக் கக்குவதாய் உள்ளன. யூடியூபில் தேடினால் அவர்களின் காணொளிகள் கொட்டிக் கிடக்கின்றன.

  • இந்துவாகப்‌ பிறந்து இந்துக் கடவுள்கள் மீது மட்டும் பாடல்கள் இயற்றாமல் இயேசுபிரான், அல்லா மீதும் பாடல்கள் இயற்றிய ஒருவரை

  • பார்ப்பனராக இருந்தாலும் தன் சாதியினரைத் தாக்கத் தயங்காமல் 'பேராசைக் காரனடா பார்ப்பான் ' என்று துணிந்து எழுதிய ஒருவரை

  • பெரியாருக்கு முன்பே கைம்பெண் மறுமணம், பெண் கல்வி, பெண்களுக்கான சொத்துரிமை உள்ளிட்டவை பற்றி பேசிய ஒருவரை

  • சகோதரி நிவேதிதையைச் சந்திப்பதற்கு முன்பே சக்கரவர்த்தினி என்னும் மகளிர் முன்னேற்ற மாத இதழுக்கு ஆசிரியராகிப் பெண்ணிய முற்போக்கு கருத்துகளைக் கூறிய ஒருவரை

  • “சாதிகள் இல்லையடி‌ பாப்பா” என்று வாய்ச்சொல்‌ வீரராக இல்லாமல், புதுச்சேரியில் தன் வீட்டில் சாதி மத வேறுபாடின்றி பலருக்குப் பலமுறை சோறு போட்ட ஒருவரை

  • பன்மொழிகள் கற்றாலும் இறுதிவரை தமிழைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டு தனக்கெனவும் குடும்பத்துக்கெனவும் சொத்து சேர்க்காமல் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் மொழிக்காகவும் சமூகத்துக்காகவும் வாழ்ந்து மடிந்த ஒருவரை

மதவெறி பிடித்தவர், சாதிவெறி பிடித்தவர் ஆர்.எஸ்.எஸ். முன்னோடி, ஒருமுறை ரயில்ல வந்துட்டு இருந்தப்போ போலீஸுக்கு பயந்து ரயிலையே நாறடிச்சிட்டாரு, நிறைய‌ கஞ்சா அடிச்சா பசியெடுக்கும். அதனால் தான் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் அப்படின்னு பாடினார், பாரதியே ஒரு‌ சப்ப பீஸு என்றெல்லாம் அசிங்கமாக வசைபாடுவது எந்த விதத்தில் நியாயம்?

பாரதி வாழ்ந்த வாழ்க்கையை ஒரு‌ சதவிகிதம் கூட வாழ வக்கில்லாதவர்கள் இவர்கள். எனவே அவரை விமர்சிக்க அருகதையற்றவர்கள். எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி பல பேருக்கு இன்று அவர் ஆசான், உந்துசக்தி, குலசாமி, தெய்வம். இந்தத் தரக்குறைவான பேச்சுகள் அந்தக் கவிச்சூரியனை ஒருபோதும் களங்கப்படுத்தாது. இன்னும் இன்னும் பிரகாசமாகவே சுடர் விடச் செய்யும்” என்று தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.

Bharathiyar's desendant, Niranjan Bharathi, has expressed his concern over how it is fair for those who have not lived even one percent of the life that the great poet Bharathiyar lived to insult him.