தமிழ்நாடு

வார்த்தைகளை அளந்து பேசுங்கள்: அதிமுகவுக்கு கரு. நாகராஜன் எச்சரிக்கை

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் லட்சியங்களை செயல்படுத்தக்கூடிய இயக்கம் பாஜகதான் என்று அதிமுக தொண்டர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள்

ராம் அப்பண்ணசாமி

பாஜக தலைவர் அண்ணாமலையின் புகழுக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய வகையில் அதிமுக பேசி வருவதை பாஜக வேடிக்கை பார்க்காது, எனவே வார்த்தைகளை அளந்து பேசுங்கள் என்று எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

`பாஜக மாநில தலைவராக அண்ணாமலை அவர்கள் தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்த உடன் மிகவும் பயந்தது அதிமுக. அவரது வளர்ச்சியை பார்த்துப் பொறாமைப்பட்டு, அவரைக் குறை சொல்லிப் பேசுவதும் விமர்சிப்பதும் அதிமுக நிர்வாகிகளுக்கு பொழுதுபோக்காக இருந்தது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்தார் அண்ணாமலை. கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 80 லட்சம் வாக்குகளும் பாஜகவிற்கு மட்டும் 50 லட்சம் வாக்குகளும் கிடைத்தது. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 12 நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார்கள். பல்வேறு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு டெபாசிட் பறிபோனது.

இவற்றையெல்லாம் உற்று நோக்கிய அதிமுக தலைவர்கள் தொடர்ந்து தலைவர் அண்ணாமலை அவர்களை விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இப்படி தொடர்ந்து பேசும் உங்களை நாங்கள் வேடிக்கை பார்க்கத் தயாராக இல்லை. உங்கள் மீது இருக்கக்கூடிய ஊழல் வழக்குகளை ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்திலே அடுக்குவோம், நீதிமன்றங்களை நாடுவோம்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களை தமிழ்நாட்டிற்கு அப்பாற்பட்டு ஒரு தலைவர் "அம்மா" என்று குறிப்பிட்டார் என்றால் அது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான். அவர் மீது காட்டிய உண்மையான அன்பும் பாசமும் அனைவரும் அறிந்ததே. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் லட்சியங்களை செயல்படுத்தக்கூடிய இயக்கம் பாஜகதான் என்று அதிமுக தொண்டர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

தலைவர் அண்ணாமலை அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய தகவலை தொடர்ந்து பேசி வருவதை வேடிக்கை பார்க்கக்கூடிய நிலையில் எங்கள் கட்சியில்லை. வார்த்தைகளை அளந்து பேசுங்கள் நீங்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும். மக்கள் தலைவர் அண்ணாமலையை விமர்சிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்றார்.