தமிழ்நாடு

திமுக அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, பபாசி செயல்படுவது அவமானகரமானது: சீமான்

நான் பேசிய நிகழ்வில் இருந்தார் என்பதற்காக டிஸ்கவரி பதிப்பக நிறுவனர் வேடியப்பனுக்கு நெருக்கடி கொடுப்பது அதிகார அச்சுறுத்தல்!

ராம் அப்பண்ணசாமி

`ஆளும் திமுக அரசின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமான பபாசி ஒரு பக்க சார்பாக செயல்படுவது அவமானகரமானது’ என அறிக்கை வெளியிட்டுள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

பாலமுரளிவர்மன் தொகுத்து, டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்த `தமிழ்த் தேசியம் ஏன்? ஏதற்கு? எப்படி?’ என்கிற நூலின் வெளியீட்டு விழா 48-வது சென்னை புத்தகக்காட்சியில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ஆளுங்கட்சியையும் முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் கடுமையாக விமர்சித்தார்.

புத்தகக் காட்சி மேடையை அரசியல் மேடையாக சீமான் பயன்படுத்திவிட்டதாக இந்த நிகழ்வுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த சம்பவத்திற்காக டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பன் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, நேற்று (ஜன.7) கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த பபாசி நிர்வாகத்தனர், இந்த விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர். இந்நிலையில் இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

`ஆளும் திமுக அரசின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) ஒரு பக்க சார்பாக செயல்படுவது அவமானகரமானது. தம்பி பாலமுரளிவர்மன் தொகுத்த `தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வில், ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!’ எனும் பாடல் ஒலிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அபத்தமானது.

அது புரட்சிப்பாவலர் பாரதிதாசன் எழுதிய வாழ்த்துப்பா. அது புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்தாக இருப்பதாலேயே, தமிழ்நாட்டில் ஒலிக்கச் செய்யக்கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. புத்தக வெளியீட்டு நிகழ்வு என்பது அரசு நடத்தும் நிகழ்வல்ல எனும்போது, அரசின் அரசாணை எங்களைக் கட்டுப்படுத்தாது.

அதனால், நிகழ்வரங்கில் எந்தப் பாடலை ஒலிக்கச் செய்ய வேண்டுமென வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. இது தமிழ்நாடு! இந்த நிலத்தில் பாரதிதாசன் எழுதிய தமிழ்த்தாய் பாடலை ஒலிக்கச் செய்வது குற்றமென்றால், தமிழர்களை திராவிடர்கள் என்று அடையாள மோசடித்தனம் செய்வது மாபெரும் குற்றமில்லையா?

புத்தகக் காட்சி அரங்கில் இருக்கும் பாதைகளுக்கு இளங்கோவடிகள், கம்பர், பாரதிதாசன், வள்ளலார் என தமிழ் முன்னோர்களின் பெயர்கள் சூட்டப்பட்ட வரிசையில் எந்த அடிப்படையில் ஐயா கருணாநிதியின் பெயரைச் சூட்டினீர்கள்? பெருந்தலைவர் காமராசர் பெயர் இல்லாத இடத்தில் ஐயா கருணாநிதி பெயர் மட்டும் எப்படி வந்தது? யாரை மகிழ்விக்க இந்த வேலை நடக்கிறது?

புத்தகக் கண்காட்சி அரங்கில் தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகளில் அமைச்சர் பெருமக்களும், ஆளுங்கட்சி நிர்வாகிகளும் திமுகவின் புகழ்பாடலாம்; ஐயா கருணாநிதியின் துதிபாடலாம். அப்போதெல்லாம் கெட்டுப் போகாத மேடை நாகரீகமும், சபையின் கண்ணியமும் நான் பேசுகிறபோது கெட்டுப் போய்விடுகிறதா?

எல்லாத் தரப்புக்கும் பொதுவாக இருக்க வேண்டிய அறிவுலகப் பெருமக்கள், ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறி நிற்பது ஏன்? 75 இலட்ச ரூபாய் நன்கொடைக்கு அறிவுலகத்தை ஆளுங்கட்சியிடம் அடமானம் வைக்கலாமா? இது வெட்கக்கேடு இல்லையா?

நான் பேசியப் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வில் இருந்தார் என்பதற்காக எந்த சம்பந்தமும் இல்லாத டிஸ்கவரி பதிப்பக நிறுவனர் வேடியப்பனுக்கு நெருக்கடி கொடுத்து மன்னிப்புக் கேட்க வைத்திருப்பது அதிகார அச்சுறுத்தல். டிஸ்கவரி பதிப்பகம் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த நூல்களை வெளியிட்டிருக்கும் நிலையில், தமிழ்த்தேசியம் சார்ந்த ஒரே ஒரு நூலை வெளியிட்டதற்கு அவரைக் குறிவைப்பது நியாயமில்லை.

அறிவுலகத்தின் அடையாளமாகத் திகழும் பதிப்பகத்தார்களும், புத்தக விற்பனையாளர்களும் ஆளுங்கட்சியிடம் சரணாகதி அடைந்திருப்பது சகித்துக் கொள்ளவே முடியாது. வேடியப்பன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என பபாசியிடம் வலியுறுத்துகிறேன்’ என்றார்.