சென்னை நந்தனத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற சென்னை புத்தகக் காட்சி, அடுத்த ஆண்டு ஜனவரி 7 அன்று தொடங்கும் என பபாசி அறிவித்துள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியில் தமிழ்நாடு மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் ஆர்வமுடன் வந்து மலிவு விலையில் புத்தகங்களை வங்கிச் செல்வர். புத்தகப் பிரியர்களுக்கும் இலக்கிய ரசிகர்களுக்கும் பெரும் திருவிழாவாக திகழும் புத்தகக் காட்சி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி 2026 ஆண்டுக்கான பபாசியின் 49-வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 7 அன்று தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 7 முதல் 19 வரை புத்தகக் காட்சி நடைபெறவுள்ளதாக பபாசி அறிவித்துள்ளது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. 900-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, வார நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும். அனைத்து அரங்கிலும் 10% சலுகை விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும். பள்ளி, கல்லூரி நூலகங்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும்.
இந்தப் புத்தகக் காட்சியில் தமிழ்நாடு பாட நூல் கழகம் உட்பட அரசுத் துறைகளும் அரங்குகள் அமைக்கும். கடந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் அரங்குகள் அமைத்திருந்தன. மேலும், ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள், உரை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் ஆகியவை நடத்தப்படும். 2025-ன் தொடக்கத்தில் நடைபெற்ற புத்தகக் காட்சியில் 20 லட்சம் வாசகர்கள் வருகை தந்தனர். சுமார் ரூ. 20 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனை ஆனதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து 2026 ஆண்டுக்கான புத்தகக் காட்சி ஜனவரி 7 அன்று தொடங்கப்படும் என்று பபாசி அறிவித்துள்ளது.
The famous Chennai Book Fair, held annually in Nandanam, Chennai, will begin on January 7 2026, BAPASI has announced.