PRINT-124
தமிழ்நாடு

சுங்க அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைப்பேசி பயன்படுத்தத் தடை

ராம் அப்பண்ணசாமி

சென்னை விமான நிலையத்தில் சுங்க சோதனையின்போது ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை கைப்பேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்த நபர் பயணிகளின் உதவியுடன் ரூ. 167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தியதை சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கண்டுபிடித்தனர். இந்த விவகாரத்தில் சில விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் இந்தத் தங்க கடத்தலில் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு பங்கு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்க சோதனை பணியில் இருக்கும் அனைவரும் பணி நேரத்தில் கைப்பேசிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்துக்கு வந்ததும் கைப்பேசிகளை ஒப்படைத்துவிட்டு, பணி நேரம் முடிந்து வீட்டுக்குச் செல்லும்போதுதான் அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

மேலும் சுங்க அதிகாரிகளும், ஊழியர்களும் பணி நேரத்துக்கு இடையே சுங்கச் சோதனை மேற்கொள்ளப்படும் இடத்தில் இருந்து எந்த காரணத்தினாலும் வெளியே செல்லக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.