சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் 
தமிழ்நாடு

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடையாது: சென்னை உயர் நீதிமன்றம்

யோகேஷ் குமார்

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோ அந்த தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் மதிமுகவின் சின்னமாக இருந்த பம்பரம் சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி, வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பில், “ஒரு கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் அவர்கள் விரும்பும் சின்னத்தை வழங்கலாம். ஆனால், மதிமுக ஒரு தொகுதியில் தான் போட்டியிடுகிறது. மேலும், பம்பரம் பொதுச்சின்னம் பட்டியலிலும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட சின்னம் பட்டியலிலும் இல்லை. இது குறித்து தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என மின்னஞ்சல் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து மதிமுக தாக்கல் செய்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடமுடியாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் மதிமுக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்த வழக்கில் தீர்வு காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.