தமிழ்நாடு

ஜூன் 15 முதல் தானியங்கி முறையில் பட்டா மாற்றம் செய்யும் திட்டம்: அதிகாரிகள் தகவல்

ராம் அப்பண்ணசாமி

`ஜூன் 15 முதல் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றும் செய்யும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்’ என்று தமிழக பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். `பட்டா மாற்றம் தொடர்பான தகவல்கள், கிரையம் செய்து கொடுப்பவருக்கும், கிரையம் பெறுபவருக்கும் குறுஞ்செய்திகள் (SMS) வாயிலாக அனுப்பப்படும்’ எனவும் அதிகாரிகள் தகவலளித்துள்ளனர்.

இதுகுறித்து மேலும் கூறிய பதிவுத்துறை அதிகாரிகள் `100% தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக்குப் பிறகு இணையவழியில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல் தொடர்பான தகவல்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரிடம் இருந்து குறுஞ்செய்திகள் வாயிலாக கிரையம் செய்து கொடுப்பவர், கிரையம் பெறுபவர் என இருவருக்கும் தெரிவிக்கப்படும்’ எனத் தெரிவித்தனர்.

`அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள் மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு ஒரு வாரத்திற்குள் விரைவாகப் பட்டா கிடைக்க வழிவகை செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது’ என்று இந்தத் திட்டத்தின் நன்மைகள் குறித்து பதிவுத்துறை அதிகாரிகள் விளக்கினார்கள்.

`கிரையம் பெறுபவர் துரிதமான பட்டா மாறுதல் சேவையைப் பெறத் தன் கைப்பேசி எண் மற்றும் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்’, `ஆவணத் தயாரிப்பின்போது விவரங்கள் அனைத்தையும் சரி பார்க்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், கிரையம் மற்றும் உரிமை மாற்றம் செய்ய சம்மந்தப்பட்ட நபரின் பெயரில் பட்டா இருப்பதைத் தவறாமல் உறுதி செய்து கொள்ள வேண்டும்’ எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.