தமிழ்நாடு

ஆட்டோ ஓட்டுநர் மகன், பழங்குடியினப் பெண் ஜேஇஇ தேர்வில் வென்றது எப்படி?

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் 2 மாதங்கள் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வுக்கு பயிற்சி எடுத்துள்ளார் பார்த்தசாரதி

ராம் அப்பண்ணசாமி

விருதுநகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சந்திரபோஸின் 17-வயது மகன் பார்த்தசாரதிக்கு சென்னை ஐஐடி-யில் ஏரோஸ்பேஸ் பொறியியல் பாடப்பிரிவில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதே போல திருச்சியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ரோஹிணிக்கு என்ஐடி திருச்சியில் வேதியியல் பொறியியல் பாடப்பிரிவில் படிக்க இடம் கிடைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த மாணவர் பார்த்தசாரதி, அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தார். 11-ம் வகுப்பு படிக்கும்போது இருந்து ஜேஇஇ தேர்வுக்குத் தயாராகி வந்தார் பார்த்தசாரதி.

இதை அடுத்து இந்த வருடம் நடந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் 2 மாதங்கள் பயிற்சி எடுத்துள்ளார் பார்த்தசாரதி.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் பங்கேற்ற பார்த்தசாரதி, தேர்வு முடிவுகளில் 112 மதிப்பெண்கள் பெற்றார். இதை அடுத்து சென்னை ஐஐடி-யில் இளநிலை ஏரோஸ்பேஸ் பொறியியல் பாடப்பிரிவில் படிக்க பார்த்தசாரதிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

திருச்சி மாவட்டத்தின் துறையூர் வட்டத்தில் உள்ள சின்ன இலுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழங்குடியின மாணவி ரோஹிணி. ரோஹிணியின் பெற்றோர் இருவருமே கூலித் தொழிலாளர்கள். அரசு பழங்குடியினர் நல பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்துள்ளார் ரோஹிணி.

பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கூலி வேலை பார்த்துக் கொண்டே ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி உள்ளார் ரோஹிணி. இதனை அடுத்து இந்த வருடம் நடந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் 73.8 சதவீத மதிப்பெண்களை பெற்றார் ரோஹிணி.

இதைத் தொடர்ந்து என்ஐடி திருச்சியில் வேதியியல் பொறியியல் பாடப்பிரிவில் ரோஹிணிக்கு இடம் கிடைத்துள்ளது. ரோஹிணியின் படிப்புக்கான முழு தொகையையும் செலுத்த தமிழக அரசு முன்வந்துள்ளது.