கடல்போல் காட்சியளிக்கும் திமுகவின் மகளிர் மாநாடு. படம்: https://x.com/arivalayam
தமிழ்நாடு

திமுக மகளிரணி மாநாடு: உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன? | Udhayanidhi Stalin |

"சுயமரியாதை மிக்க கழக மகளிர் படை இருக்கும் வரை சங்கிகளால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது!"

கிழக்கு நியூஸ்

திமுகவின் மேற்கு மண்டல மகளிர் மாநாடு வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற பெயரில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டார்கள். இந்த மாநாட்டில் பங்கேற்க லட்சக்கணக்கான மகளிர் திரண்டுள்ளார்கள்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டில் பேசியதாவது:

"தலைவருடைய கட்டளையின் பெயரில் இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை திருவண்ணாமலையில் கடந்த 14 அன்று வெற்றிகரமாக நடத்தி காட்டினோம். கிட்டத்தட்ட 1,30,000 இளைஞரணி நிர்வாகிகள் அந்தச் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு ஒரு மாநாடு போல அந்த நிகழ்ச்சி நடந்தது.

அந்த எழுச்சியைப் பார்த்து இளைஞர்கள் நம்முடைய திராவிட முன்னேற்ற கழகத்தில் எந்த அளவுக்கு ஈடுபாடோடு வந்திருக்கிறார்கள் என்று அந்த எழுச்சியைப் பார்த்து, அந்த மக்கள் கடலைப் பார்த்து, இளைஞர்கள் கடலைப் பார்த்து ஒரு 10 நாட்கள் சங்கிக் கூட்டமும் அடிமைக் கூட்டமும் புலம்பிகிட்டே இருந்தது.

இன்று பல்லடத்தில் கடல்போல கூடியிருக்கக்கூடிய மகளிர் கூட்டத்தை மாநாட்டைப் பார்த்தால் சங்கிக் கூட்டமும் அடிமைக் கூட்டமும் அடுத்த 10 நாள்கள் நிச்சயமாகத் தூங்கப் போவதில்லை.

நம்முடைய தலைவருடைய நல்லாட்சிக்கும் தலைமைக்கும் மகளிர் மத்தியில் கிடைத்திருக்கக்கூடிய அந்த வரவேற்புக்கு இங்கு திரண்டிருக்கக்கூடிய மகளிர் கடலே ஒரு சாட்சி.

இன்று தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மகளிருக்கான உரிமைக் குரலாக நம்முடைய கழக தலைவருடைய குரல் இன்று ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியினுடைய தலைவர் முன்னாள் முதலமைச்சர் சகோதரி மெகபூபா முஃப்தி அவர்களுடைய பேட்டி வெளியானது. அம்மையார் அவர்கள் காஷ்மீரில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்கள். சகோதரி மெகபூபா முஃப்தி அவர்கள் தன்னுடைய தாய்மொழி காஷ்மீரியில் பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒரு பத்திரிக்கையாளர் குறுக்கிட்டு நீங்கள் ஏன் தாய்மொழியில பேசுகிறீர்கள்? உருது மொழியில் பேசுங்கள் என்று ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி கேட்ட உடனே அம்மையார் மெகபூபா முஃப்தி அவர்கள் சொன்ன வார்த்தை, என்னிடம் மொழிபெயர்ப்பைக் கேட்கிறீங்களே உங்களுக்கு தைரியம் இருந்தால் தமிழ்நாட்டுக்குச் சென்று என்னுடைய சகோதரர் மு.க. ஸ்டாலினிடம் இதைக் கேட்க தைரியம் இருக்கிறதா என்று கேட்டார்கள்.

தாய்மொழியில பேசக்கூடாது என்று என்னிடம் சொல்றீங்களே தமிழ்நாட்டில் சொல்றதுக்கு உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா என்று பத்திரிக்கையாளரைப் பார்த்து முன்னாள் முதலமைச்சர் கேட்டிருக்கிறார்கள். மொழி உரிமை, மாநில உரிமை, பெண் உரிமை என்று வந்துவிட்டால் காஷ்மீரில் இருக்கிறவர்கள் கூட நம்முடைய முதலமைச்சர் உடைய பேர் தான் முதலில் ஞாபகத்துக்கு வரும். அப்படிப்பட்ட தலைவரை நாம பெற்றிருக்கிறோம்.

திராவிட இயக்கத்துடைய தொடக்கம் முதலே இந்த இயக்கத்துக்காக ஏராளமான மகளிர் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். அத்தகைய பெருமைக்குரிய மகளிருடைய தொடர்ச்சியாக தான் இங்கு வந்திருக்கக்கூடிய அத்தனை சகோதரிகளையும் நான் பார்க்கிறேன். இன்னும் சொல்லப்போனால் தந்தை பெரியாருக்கு அவருடைய 'தந்தை பெரியார்' என்கிற பெயரைக் கொடுத்தது இங்கு வந்திருக்கக்கூடிய மகளிர் தான்.

தந்தை பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில், கலைஞர் காட்டிய வழியில் இன்று நம் தலைவர் அவர்கள் ஏராளமான திட்டங்களை கொடுத்துட்டு இருக்கிறார். பேரறிஞர் அண்ணா தான் சுயமரியாதை திருமணம் செய்ய உகந்த சட்டத்தைக் கொண்டு வந்தார் கலைஞர் அவர்கள் தான் இந்தியாவிலே முதல் முறையாக காவல் துறையில மகளிருக்கு பணி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

சுயமரியாதை மிக்க கழக மகளிர் படை இருக்கும் வரை சங்கிகளால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது!" என்றார் உதயநிதி ஸ்டாலின்.

As Long as a Self-Respecting Women’s Wing Exists, Sanghis Cannot Even Touch Tamil Nadu, says Udhayanidhi Stalin.

Udhayanidhi Stalin | DMK | MK Stalin | Kanimozhi | Tiruppur |