தமிழ்நாடு

கனமழை: சென்னையின் பல்வேறு இடங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு!

திருவல்லிக்கேணியில் உள்ள ஜானி ஜான் கான் சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வழியாக மழைநீர் வடிகின்ற விதத்தை நேரில் ஆய்வு செய்தார்.

ராம் அப்பண்ணசாமி

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று (அக்.14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக நேற்று இரவு தொடங்கி, சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார்.

முதலில், பள்ளிக்கரணை மற்றும் கோவிலம்பாக்கம் இடையே உள்ள நாராயணபுரம் ஏரியின் கரையோரத்தில் ஆய்வு செய்தார் உதயநிதி ஸ்டாலின். நாராயணபுரம் ஏரிக்கு மழை நீர் வந்து சேருகிற வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ள விதம், கரைகளின் தன்மை உள்ளிட்டவைக் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

அதன்பிறகு திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள, இராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வழியாக மழைநீர் வடிகின்ற விதத்தை ஆய்வு செய்தார் உதயநிதி ஸ்டாலின். கொட்டும் மழையில் பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளர்களுக்கு பால் மற்றும் சிற்றுண்டிகளை அவர் வழங்கினார்.

இதனை அடுத்து ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஜி.பி.சாலையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டு, நீர் தேங்காமல் இருக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்

இறுதியாக, மயிலை முசிறி சுப்பிரமணியம் சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க சென்னை மாநகராட்சிப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார் உதயநிதி ஸ்டாலின்.