ANI
தமிழ்நாடு

நெல்லை, குமரிக்கு ஆரஞ்சு அலர்ட்: மன்னார் வளைகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி!

நவம்பர் 1 வரை தமிழ்நாடு, கேரளா, மாஹே உள்ளிட்ட இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு படிப்படியாகக் மழை குறையும்.

ராம் அப்பண்ணசாமி

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் ஆழமான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் இன்று (நவ.02) கனமழை பெய்தது.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு இன்று (நவ.02) பேட்டியளித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி சோமா சென் ராய், `இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியிலும், தமிழ்நாட்டிலும் கனமழை பெய்ததாக எங்களுக்கு அறிக்கை கிடைத்துள்ளது.

ஆனால் இதைத் தவிர்த்து நாட்டின் பிற பகுதிகளில் எங்கும் கனமழை பெய்யவில்லை. அடுத்த 2-3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதிகளில் வானம் தெளிவாக இருக்கும்’ என்றார்.

அடுத்த 7 நாட்களுக்கான தட்பவெப்ப சூழல் குறித்து அக்.31-ல் பதிவிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், `நவம்பர் 1 வரை தமிழ்நாடு, கேரளா, மாஹே உள்ளிட்ட இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு படிப்படியாகக் மழை குறையும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இன்று (நவ.02) திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. கன்னியாகுமரி கொட்டாரத்தில் 16 செ.மீ. மழையும், மைலாடியில் 11 செ.மீ. மழையும், தக்கலையில் 8.5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. நாளை காலை வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், இந்த இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்