தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

அமலாக்கத் துறை கைது நடவடிக்கை: உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு

கிழக்கு நியூஸ்

அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது அல்ல என்று தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். 10 நாள்களுக்கு அமலாக்கத் துறை காவலில் இருந்த கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, தனது கைது நடவடிக்கைக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா கடந்த 3-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளது சட்டவிரோதமானது அல்ல என்று கூறி நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா நேற்று தீர்ப்பளித்தார். கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்றக் காவலின் காலத்தை சட்டத்துக்குள்பட்டுதான் ஆராய வேண்டுமே தவிர, தேர்தல் நேரத்தைக் கருத்தில்கொண்டு ஆராயக் கூடாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.